கல்வியைக் காவிமயமாக்குவதில் என்ன தவறு?

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேள்வி
கல்வியைக் காவிமயமாக்குவதில் என்ன தவறு?
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு

இந்தியா தனது 75-வது சுதந்திர தினம் கொண்டாடும் தருணத்தில், வெளிநாட்டு மொழியைக் கொண்டு கல்வி கற்கும் நிலையை உருவாக்கிய மெக்காலே கல்வி முறையை மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியிருக்கிறார். காலனித்துவ மனோபாவத்திலிருந்து வெளியே வர வேண்டும் எனப் பேசியிருக்கும் அவர், கல்வியைக் காவிமயப்படுத்துவதில் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் உள்ள தேவ் சன்ஸ்கிருதி விஷ்வ வித்யாலயாவில், இன்று நடைபெற்ற அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தெற்காசிய நிறுவனத் தொடக்க விழாவில், வெங்கய்ய நாயுடு கலந்துகொண்டார்.

நமது வேர்களுக்குத் திரும்ப வேண்டும்

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், “பல நூற்றாண்டுகால காலனி ஆட்சி, நம்மை நாமே ஒரு தாழ்ந்த இனமாகக் கருதுமாறு நமக்குக் கற்றுக்கொடுத்துவிட்டது. நமது சொந்த கலாச்சாரத்தையும், மரபார்ந்த அறிவையும் நாமே இழிவாகக் கருதும் வகையில் நாம் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். வெளிநாட்டு மொழி மூலம் கல்வி கற்கும் அளவுக்கு அம்மொழி திணிக்கப்பட்டிருப்பது, சமூகத்தில் ஒரு சிறிய பிரிவுக்கு மட்டுமானதாகக் கல்வியைக் குறுக்கிவிட்டது. பெருமளவிலான மக்களுக்குக் கல்வி பெறும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.

மேலும், “நாம் நமது பாரம்பரியம், கலாச்சாரம், முன்னோர்கள் குறித்து பெருமிதம் கொள்ள வேண்டும். நாம் நமது வேர்களுக்குத் திரும்ப வேண்டும். காலனித்துவ மனப்பான்மையைக் கைவிட்டு, நம் குழந்தைகள் இந்தியர் எனும் அடையாளத்தைப் பெருமிதமாகக் கருதுமாறு கற்றுக்கொடுப்போம். நாம் எவ்வளவு முடியோ அவ்வளவு இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். நமது தாய்மொழியை நேசிக்க வேண்டும். அறிவுப் பொக்கிஷமாக விளங்கும் நமது வேதங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள கட்டாயம் சம்ஸ்கிருதம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.

கல்வி முறையில் இந்தியத் தன்மையைக் கொண்டுவருவதுதான், புதிய கல்விக்கொள்கையின் முக்கிய நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர், புதிய கல்விக்கொள்கை தாய்மொழியை வளர்த்தெடுப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் கூறினார். இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினர், ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் தங்கள் தாய்மொழியிலேயே பேசுவதாகக் கூறிய அவர், தங்கள் தாய்மொழி குறித்த பெருமிதம் இருப்பதாலேயே ஆங்கிலத்தைத் தவிர்ப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

காவிமயப்படுத்துவதில் தவறு இல்லை

கூடவே, “நாம் கல்வியைக் காவிமயப்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்படுகிறோம். ஆனால், காவிமயப்படுத்துவதில் என்ன தவறு? அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் உலகமே ஒரு குடும்பம்தான் என்றும் நமது பண்டைய நூல்களின் தத்துவங்கள் சொல்கின்றன. இன்றும் கூட நம் நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் அவை வழிகாட்டுகின்றன” என்றார் வெங்கய்ய நாயுடு.

தெற்காசிய நாடுகள் பலவற்றுடன் இந்தியா உறுதியான உறவைக் கொண்டிருந்ததாகக் கூறிய அவர், ஆப்கானிஸ்தான் முதல் கங்கைச் சமவெளி வரை சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.

“எந்த நாட்டையும் தாக்குவதில்லை எனும் நமது கொள்கை உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. வன்முறையைத் தவிர்த்து அகிம்சையையும் அமைதியையும் தேர்ந்தெடுத்த அசோக சக்கரவர்த்தியின் நாடு இது. பண்டைய நாளந்தா மற்றும் தட்சசீலப் பல்கலைக்கழகத்தில் பயில உலகம் முழுவதும் இருந்து மக்கள் இந்தியாவுக்கு வந்த காலம் இருந்தது. வளம் கொழிக்கும் நிலையில் இருந்தபோதும், எந்த ஒரு நாட்டையும் தாக்க வேண்டும் என்று இந்தியா ஒருபோதும் நினைத்ததில்லை. ஏனெனில், உலகம் அமைதியை நாடுகிறது என நாம் உறுதியாக நம்புகிறோம்” என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.