தீக்குளிக்க முயன்றாரா கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை?: தீயாக பரவும் வீடியோவால் பரபரப்பு

அந்த வீடியோவில் உள்ள காட்சி
அந்த வீடியோவில் உள்ள காட்சி

சமூக வலைதளங்களில் பரவிய பல தவறான தகவல்களால் தான் கனியாமூர் பள்ளி கலவரத்திற்கு காரணமாக அமைந்தது. தற்போது உயிரிழந்த பள்ளி மாணவியின் தந்தை தனது மகளின் மரணத்துக்கு நீதி கேட்டு தீக்குளிக்க முயன்றதாக பரவும் ஒரு வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது பெற்றோர், உறவினர்கள் நடத்திய போராட்டமும், அதனைத் தொடர்ந்து நடந்த பெரும் கலவரமும் தமிழகத்தை இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளச் செய்யவில்லை.

சமூக ஊடகங்கள் மூலமாக தவறான தகவல்களைப் பரப்பி கலவரத்திற்குத் தூண்டியதாக பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது மாணவியின் தந்தை ராமலிங்கம் தனது மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதாக ஒரு வீடியோவை பரவி வருகிறது.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்று இருக்கும் பகலவன், இது குறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் அந்த வீடியோவில் தீக்குளிக்க முயன்றவர் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் காவல் சரகம் பெருநாட்டான்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்பது தெரிய வந்தது.

அவரது குடும்பத்தினருக்கும் அவரது பக்கத்து வீடான முனுசாமி குடும்பத்தினருக்கும் வேலி பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதில் இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் 14.7.2022-ந் தேதி தேவேந்திரன் என்பவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தான் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென தீக்குளிக்க முயற்சித்த போது பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த வீடியோ என்று தெரிய வந்தது .

இதனைச் சுட்டிக்காட்டி இருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், "இந்த சம்பவத்தை வேறு விதமாக திசை திருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் இறந்து போன மாணவியின் தந்தை நீதி கேட்டு தீக்குளிக்க முயற்சி செய்வது போன்று பொய்செய்தியை, மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலோ அல்லது காவல்துறை மீது களங்கம் விளைவிக்கும் நோக்கத்திலோ பரப்பி வருகின்றனர்.

இதுபோன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in