சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகாலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகன ஓட்டிகள் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.
மார்கழி மாதம் முடிந்து தைமாதம் பிறந்ததும் பனியின் தாக்கம் குறையத் தொடங்கும். ஆனால் தற்போது பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காலை உதிக்க வேண்டிய சூரியன் காலை 8 மணியானாலும் தெரிவதில்லை. சூரியனின் தாக்கத்தை காலை 10 மணிக்கு மேல் தான் உணர முடிகிறது. அந்த அளவிற்கு பனியின் தாக்கம் உள்ளது.
சென்னை அரக்கோணம் இடையிலான ரயில்கள் பனி மூட்டம் காரணமாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டு செல்கிறது. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதில் கூட தாமதம் ஏற்படுகிறது. இதேப்போல செங்கல்பட்டில் இருந்து சென்னையை நோக்கி வரும் வாகனம் காலை 7 மணியை கடந்த பின்பும் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வர வேண்டியுள்ளது என்கின்றனர் வாகன ஓட்டிகள்.
இதுத்தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலசந்திரனிடம் பேசினோம். ‘’பகல் நேரங்களில் வெப்பம் காரணமாக நீர் நிலைகள் மற்றும் தாவரங்களிலிருந்து நீர் ஆவியாகி மேலே நகர்கிறது. இரவு நேரங்களில் மேகங்கள் இல்லாத சூழ்நிலையில் குறைந்த வெப்பநிலை, அதிக காற்று இல்லாத காரணத்தினால், அந்த நீர்த்துளிகள் காற்றிலுள்ள தூசிக்களில் படிந்து இந்த மாதிரியான சூழலை நமக்கு தருகிறது. இது ஒருசில பகுதிகளில் நிகழக்கூடிய ஒன்று.
இதனால் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. தற்போது வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் ஐந்து நாட்களில் பனியின் தாக்கம் படிப்படியாக குறையும்’’ என தெரிவித்தார்.