கேரளத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்: மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

கேரளத்தில் பரவும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்: மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?

கேரள மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு பன்றிப் பண்ணையில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அப்பகுதியிலிருந்து பன்றிகள் வேறு இடத்துக்குக் கொண்டுசெல்லப்படுவதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுத்துவருகிறது. கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் பன்றிக் கறி விற்கும் கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன. இந்நிலையில், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.

ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் என்றால் என்ன?

இது வைரஸ் மூலம் பரவக்கூடியது. பன்றிகள் அருகருகே இருக்கும்போது அவற்றின் உடல்கள் ஒன்றன் மீது ஒன்று உரசினாலோ அல்லது அவற்றின் உடல் திரவங்கள் ஒரு பன்றியிலிருந்து இன்னொரு பன்றிக்குச் சென்றாலோ இந்த வைரஸ் பரவிவிடும். பன்றி வளர்ப்பவர்களின் ஆடைகள், பயன்படுத்தும் பொருட்களில் இந்த வைரஸ் தொற்றிக்கொண்டுவிடும் என்றும், அதன் மூலம் பிற பன்றிகளுக்கும் பரவிவிடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தப் பாதிப்புக்குள்ளாகும் பன்றிக்கு 40.5 டிகிரி செல்சியஸ் வரை கடும் காய்ச்சல் ஏற்படும். கடும் சோர்வடையும் பன்றி, உணவு உண்பதை நிறுத்திவிடும்.

சமைக்கப்படாத உணவுக் கழிவுகள் பன்றிகளுக்குத் தீவனமாகத் தரப்படும்போது அதன் மூலம் இந்த வைரஸ் பரவலாம் என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

இந்தக் காய்ச்சல் வளர்ப்புப் பன்றிகளை மட்டுமல்லாமல், காட்டுப் பன்றிகளையும் தொற்றக்கூடியது. இதன் இறப்பு விகிதம் 100 சதவீதம் என்பது கவனிக்கத்தக்கது. இதுவரை இந்நோய்க்கு என வெற்றிகரமான தடுப்பூசி கண்டறியப்படவில்லை.

அதேசமயம், மனிதர்களுக்கு இந்த நோயால் ஆபத்து இல்லை என்பது ஆறுதல் அளிக்கும் தகவல். எனினும், பன்றி வளர்ப்பில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இதனால் வேறுவகையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

பன்றி இறைச்சி மூலம் கிடைக்கும் புரதம் அபரிமிதமானது. உலகின் இறைச்சி உணவில் 35 சதவீதம் பன்றி இறைச்சிதான். எனவே, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவல், மனிதர்களுக்குப் பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கிய ரீதியிலும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடியது.

காட்டுப் பன்றிகளும் இந்தத் தொற்றுக்குள்ளாகும் என்பதால், இந்தப் பாதிப்பால் பல்லுயிர்ச் சூழலுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, இந்த நோய் பாதிப்பு பன்றிகளுக்கு மரணத்தையும், மனிதர்களுக்குப் பல்வேறு வகைகளில் இழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in