பள்ளியில் மாணவி ஸ்ரீமதிக்கு நடந்தது என்ன?- அடுத்தடுத்து வெளியானது அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

பள்ளியில் மாணவி ஸ்ரீமதிக்கு நடந்தது என்ன?- அடுத்தடுத்து வெளியானது அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பள்ளியில் அவர் இருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி. இவர், கடந்த 13-ம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு 3-வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்ததாக அவரது பெற்றோருக்கு பள்ளி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு பெற்றோர் வருவதற்குள் மாணவியின் உடல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடந்தது. எங்கள் அனுமதியில்லாமல் எப்படி பிரேத பரிசோதனை செய்யலாம் என்று பெற்றோர் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பெற்றோர், உறவினர்கள், ஊர்மக்கள் கடந்த 13-ம் தேதி போராட்டத்தில் குவித்தனர். பள்ளியின் முன்பு 3 நாட்கள் போராட்டம் நடந்து வந்த நிலையில், 17-ம் தேதி வன்முறை வெடித்தது. பள்ளியில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த வாகனங்களை தீ வைத்து எரித்ததோடு, பொருட்களை எடுத்துச் சென்றனர். வன்முறையை தடுக்க தவறியதாக கூறி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் அடுத்தடுத்து மாற்றப்பட்டனர்.

இதனிடையே, மாணவியின் மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. சிபிசிஐடி அதிகாரிகள் 2-வது நாளாக பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் நாள் விசாரணையில் பள்ளியின் 3-வது மாடியில் இருந்து பொம்மையை தள்ளிவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், மரணம் நடந்த, அதாவது, 12-ம் தேதி இரவு நேரத்தில் மாணவி ஸ்ரீமதி வகுப்பறைக்கு வரும் முதல் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஸ்ரீமதி மெதுவாக வகுப்பறைக்கு நடந்து வருகிறார். மிகவும் சோர்வாக இருக்கும் மாணவி, பெஞ்சில் படுத்துக் கொள்கிறார். அவரது அருகில் சகமாணவிகள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 2-வது வீடியோ காட்சி வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

2-வது மாடியில் உள்ள வகுப்பறையில் இருந்து சீருடையுடன் வரும் ஸ்ரீமதி, விடுதி இருக்கும் 3-வது மாடிக்கு செல்கிறார். அந்த நேரத்தில் தனது புத்தகப் பையை 2-வது மாடியிலேயே விட்டுச் செல்கிறார். அதன் அருகில் பெஞ்சில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அடுத்தடுத்து வெளியாகியுள்ள இந்த சிசிடிவி காட்சியை வைத்து காவல்துறையினரின் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. தீவிர விசாரணைக்கு பின்னே மாணவியின் மரணத்தில் முடிச்சு அவிழும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in