கணவரின் குடும்பம் பணம் கேட்டு மிரட்டியதா?- காதல் திருமணம் செய்த குஜராத் பெண் விவகாரத்தில் நடந்தது என்ன?

தென்காசி வாலிபர் வினீத்தை திருமணம் செய்து கொண்ட குஜராத் இளம்பெண்
தென்காசி வாலிபர் வினீத்தை திருமணம் செய்து கொண்ட குஜராத் இளம்பெண்

தனது கணவரின் குடும்பம் பணம் கேட்டு மிரட்டுவதாக காதல் திருமணம் செய்து கொண்ட குஜராத் இளம்பெண் வெளியிட்ட ஆடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம்பெண் தனது குடும்பத்தினருடன் மதுரை வந்துள்ளார்.

தென்காசி மாவட்டம், இலஞ்சி கொட்டாகுளம் பகுதியில் வினீத் -கிருத்திகா காதல் திருமணம் செய்து கொண்டனர். கிருத்திகாவை அவரது பெற்றோர் கடத்திச் செல்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வைரல் ஆனதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கிருத்திகாவை வலைவீசி தேடிவந்தனர். இந்த வழக்கில் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்கள் அறங்கேறி வரும் சூழலில், கிருத்திகாவை மீட்பதற்காக தனிப்படை போலீஸார் தற்போது குஜராத் விரைந்துள்ளனர்.

இந்த சூழலில், குஜராத் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து கிருத்திகாவுக்கும், அவரது உறவினரான மேத்ரிக் பட்டேல் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது போன்ற வீடியோ ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து, கிருத்திகா பேசுவது போன்ற ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில், தன் விருப்பப்படியே தனது பெற்றோர் உடன் இருப்பதாக கிருத்திகா தெரிவித்த சூழலில், 2 நாட்களுக்கு முன்னர் கிருத்திகாவும், வினித்தும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது போன்ற ஒரு ஆடியோ வெளியானது. இப்படி, நாளுக்கு நாள் இந்த வழக்கில் பல்வேறு பரப்பரப்புகள் அரங்கேறி வரும் சூழலில், தற்போது மீண்டும் கிருத்திகா ஒரு வீடியோவை பதிவிட்டு அவரது வழக்கறிஞர்கள் மூலமாக வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், வினீத்தின் குடும்பத்தார் என்னை வைத்து எனது தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டல் விட்டதாகவும், இதை தெரிந்து கொண்ட தான் தனது கணவரான மேத்ரிக் பட்டேல் மூலம் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்து தன்னை அழைத்துச் செல்லும்படி கோரிக்கை வைத்ததாகவும், அதனால்தான் தனது பெற்றோர் தன்னை அழைத்து சென்றதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ள சூழலில், பணத்திற்காக வினீத் குடும்பத்தினர் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கிருத்திகா வீடியோ வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வாக இன்று காலை கிருத்திகா தனது குடும்பத்தினரோடு மதுரை விமான நிலையம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருத்திகா குடும்பத்தோடு மதுரை வந்துள்ளதால் இந்த வழக்கு இன்றுடன் முடிவுக்கு வந்துவிடுமென காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in