முதல்வர் என்ன சொன்னார்?- சந்திப்புக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சொன்ன முக்கிய தகவல்

முதல்வர் என்ன சொன்னார்?- சந்திப்புக்கு பின் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சொன்ன முக்கிய தகவல்

முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தனது கணவர், மகனுடன் முதல்வர் ஸ்டாலினை கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, அப்போது, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர், சட்டப்படி நியாயமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தாயார் செல்வி, "முதல்வரிடம் எனது மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அவர்கள் தப்பிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம். விசாரணையை குறுகிய காலத்தில் முடிக்க சொல்லியிருக்கிறோம். பள்ளி மாணவர்கள் அனைவரும் இன்று வரை கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கும், இந்த கலவரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர்களை விடுக்க வேண்டும் என்றும் முதல்வரிடம் கேட்டிருக்கிறோம்.

பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீன் எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறோம். மாணவி மரணத்தில் குற்றவாளிகள் யாரையும் தப்பிக்க விடமாட்டோம். மாணவி மரணத்தில் நீதி கிடைக்கும் என்று முதல்வர் சொன்னார்.

எனது மகளின் உடற்கூராய்வு செய்யப்பட்ட வீடியோ இதுவரை தரவில்லை. முதல் பிரேத பரிசோதனை அறிக்கையும், 2-வது பிரேத பரிசோதனை அறிக்கையும் தந்திருக்கிறார்கள். ஜிப்மர் அறிக்கை எங்களுக்கு தரப்படவில்லை. நீங்கள் மேல்முறையீடு செய்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று விழுப்புரம் நீதிமன்றம் சொல்லிவிட்டது. அதை நாங்கள் மேல்முறையீடு செய்து வாங்க உள்ளோம். அதனை வாங்கியப் பிறகுதான் அறிக்கையில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று தெரியவரும்.

எனது மகளின் உடற்கூராய்வு அறிக்கையில் சில மறைக்கப்பட்டுள்ளன. நாங்கள் கேட்ட டாக்டரை கொடுத்திருந்தால் எங்களுக்கு திருப்திகரமாக இருந்திருக்கும். சிபிசிஐடியும் எங்கள் வழக்கில் தாமதமாகத்தான் வேலை பார்க்கிறார்கள். ஆனால், இந்த நிமிடம் வரை நாங்கள் முழுமையாக நம்பியிருக்கிறோம். பள்ளி நிர்வாகம் இதுவரை சிசிடிசி காட்சிகளை எங்களிடம் காட்டவில்லை. நிர்வாகத்தின் மீது தவறு இருப்பதால்தான் சிசிடிவி காட்சியை காண்பிக்காமல் இருக்கிறார்கள். நாங்கள் எந்தப் பக்கம் போனாலும் அழுத்தம் கொடுக்கிறார்கள். தடையாக இருக்கிறார்கள். யார் விலைக்கொடுத்து வாங்கினாலும் முதல்வர், எனது மகளின் மரணத்துக்கான நீதியை வெளியேக் கொண்டு வருவார் என்று நம்புகிறோம். பள்ளி நிர்வாகிகள் ஜாமீனில் வெளியே வந்தாலும் அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் கூறவில்லை. அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். எங்களுடைய சந்தேகங்களை சிபிசிஐடி தீர்க்க வேண்டும். எதை கண்டுபிடித்தாலும் எங்களிடம் சொல்ல வேண்டும். இன்னும் வேகமாக செயல்பட வேண்டும். எனது மகளின் தோழிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வாக்குமூலம் கொடுத்துள்ளதாக சிபிசிஐடி போலீஸார் மட்டுமே சொல்லியிருக்கிறார்கள். எனக்கு அவர்கள் யார் என்று தெரியாது. அவர்கள் எனது மகளின் தோழிகள்தான் என்று தெரியப்படுத்த வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in