ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசியது என்ன?

உக்ரைன் மீதான தாக்குதல் தீவிரடைந்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதினுடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, என்ன பேசினார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கையை எடுத்துள்ளது ரஷ்யா. நேற்று திடீரென தாக்குதலை தொடங்கிய ரஷ்ய படைகள், வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. அந்நாட்டின் முக்கியமான அணுஉலையை ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ளது. இந்த தாக்குதலில் 137 பேர் இறந்துவிட்டதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார். இருந்தாலும், தங்களை தற்காத்துக் கொள்ள ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகிறது. பலர் நாட்டை விட்டு வெளியே வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். தமிழக மாணவர்கள் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள சுரங்கு அறைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே, ரஷ்யா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். குறிப்பாக, இந்தியா இதில் தலையிட்டு போரை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்நிலையில, ரஷ்ய அதிபர் புதினை இந்திய பிரதமர் மோடி நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது, அமைதியான, நேர்மையான பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே ரஷ்யா, நேட்டோ நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள வேறுபாடுகளை கலைய முடியும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, உக்ரைன் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்திவிட்டு தூதரக ரீதியான பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கான அனைத்து வழிகளையும் கையாள வேண்டும் என்றும் இந்தியர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அதே நேரத்தில், உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், தற்போதைய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.