முதல்வர் ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் பேசியது என்ன?

முதல்வர் ஸ்டாலினிடம் கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் பேசியது என்ன?

மர்மமான முறையில் உயிரிழந்த கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் தாயாரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேசியுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தியபோது வன்முறை வெடித்தது. பள்ளியில் புகுந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பேருந்துகளை எரித்ததோடு, பொருட்களையும் சூறையாடினர். இந்த வன்முறை தொடர்பாக 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிலர் ஜாமீனில் வந்துள்ளனர்.

மகளின் மரணத்துக்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெற்றோரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பின்னர் நீதிமன்றத்துக்கு மாணவியின் மரண வழக்கு சென்றது. நீதிமன்றம் உத்தரவுபடி மாணவியின் உடலை பெற்றோர் வாங்கி இறுதிச் சடங்கு செய்தனர். இதில் அமைச்சர் கணேசன் உடனிருந்து அனைத்து காரியங்களையும் செய்தார். மாணவி தொடர்பாக வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்நிலையில், மாணவிக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கணேசன் ஆகியோர் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்துக்கு வந்தனர். வீட்டில் இருந்த மாணவியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வர் ஸ்டாலினை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் மாணவியின் பெற்றோரிடம் முதல்வர் பேசினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவியின் தாயார் செல்வி, "அமைச்சர்கள் அன்பில் மகேஷ், உள்ளூரை சேர்ந்த அமைச்சர் கணேஷன் ஆகியோர் எங்கள் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது, அமைச்சர் அன்பில் மகேஷ், முதல்வருக்கு போன் போட்டுக் கொடுத்தாங்க. நான் முதல்வரிடம் பேசியபோது அவர் ஆறுதல் கூறினார். அப்போது, என்னுடைய மனதில் என்னென்ன இருக்கிறதோ அதை உங்களிடம் நேரில் சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். எப்போது வேண்டுமானாலும் வாங்க. உங்கள் கோரிக்கை என்னவென்றாலும் என்னிடம் சொல்லுங்க என்று முதல்வர் சொன்னார். பள்ளியில் முதல் நாளில் என்ன நடந்தது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கேட்டார்கள். கட்சிக்காரர்கள் என்று பாரபட்சம் பார்க்க மாட்டோம். யார் தவறு செய்திருந்தாலும் அவர்களுக்கு தண்டனை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் சொன்னாங்க" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in