விண்ணை எட்டும் விலைவாசி... என்ன செய்கிறது அரசு?

விண்ணை எட்டும் விலைவாசி... என்ன செய்கிறது அரசு?

விலைவாசி உயர்வு ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கு மட்டுமல்ல அரசுக்குமே பெரிய பிரச்சினை. சட்டப் பேரவைகளுக்குப் பொதுத் தேர்தல் வரும்போது மக்களுடைய ஆதரவை இழக்க நேரிடும் என்பது அதில் முக்கியமானது. வேறு பிரச்சினைகள் என்னவென்றால், விலைவாசி அதிகரிக்கும்போது நுகர்வு குறையும். அதனால் மக்களுடைய வாழ்க்கைத்தரம் குறையும். அதைவிட முக்கியம் பொருளாதார நடவடிக்கைகளே சுருங்கத் தொடங்கும். அரசுக்கு நேர்முக – மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயும் குறையும். எனவே விலைவாசியைக் குறைப்பது அரசுக்கு அவசியமான கடமையாகிறது.

வெங்காயம், உருளை

விலைவாசி தொடர்ந்து (லேசாகத்தான்) உயர்ந்துகொண்டே இருந்தால்தான் உற்பத்தியாளர்களுக்கு உற்சாகம் ஏற்படும். இது பொருளாதாரம் சார்ந்த துறைகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியும். விவசாயம், தொழில் துறை இரண்டுக்குமே இது பொருந்தும். அப்போதுதான் உற்பத்தியாளர்களுக்கும் சாகுபடியாளர்களுக்கும் தொடர்ந்து வருமானமும் லாபமும் கிடைக்கும். வெங்காயம் – உருளைக்கிழங்கு விவகாரத்தில் கடந்த இரு பத்தாண்டுகளாக நாடு இதை நேரடியாகவே பார்த்துக்கொண்டிருக்கிறது.

வெங்காயமும் உருளைக் கிழங்கும் விலை அதிகமாக விற்கும்போது முதலில் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பார்கள். பிறகு விலைக்கட்டுப்பாட்டை அறிவிப்பார்கள். அதன் பிறகு கையிருப்புக்கு வரம்பு நிர்ணயிப்பார்கள். பண்ணைப் பசுமைக் கடை உள்ளிட்ட பொது அங்காடிகள் மூலம் சற்றே விலையைக் குறைத்து விற்பதாக பாவனை செய்வார்கள். இதற்குள் வழக்கமாக வெங்காயம், உருளை சாகுபடி செய்யும் மாநிலங்களைத் தவிர வேறு மாநிலங்களிலும் வெங்காய, உருளை சாகுபடி பெருகும். அடுத்த பருவ விளைச்சலில் சந்தைக்கு இவை அதிக அளவில் வரத் தொடங்கிவிட்டால் விலையும் மட்டுப்படத் தொடங்கும், சில சமயங்களில் சரிந்தேவிடும்.

ஆலைவாய் பொருட்களுக்கும் பண்ணைப் பொருட்களுக்கும் பெரிய வேறுபாடு என்னவென்றால் ஆலைகளில் தயாரிக்கப்படும் பொருட்களின் விலை உயர்ந்தால் எந்தக் காலத்திலும் அது குறைவதில்லை. பண்ணையில் விளையும் காய்கறிகள், பழங்கள், பூக்கம், உணவு தானியங்கள் அப்படியில்லை. ஆண்டுதோறும் அதிகம் விளைந்தால் விலையில் சரிவு ஏற்படுவதும், விளைச்சல் குறைந்தால் விலை அதிகரிப்பதும் நடைபெறுகிறது. எதுவாக இருந்தாலும் வியாபாரிகளும் இடைத் தரகர்களும் சம்பாதிக்கும் அளவுக்கு உற்பத்தியாளர்களுக்கு வருவாய் கிடைப்பதில்லை. விவசாயிகளே நேரடியாக விற்கும் ‘உழவர் சந்தை’ உத்திகள்கூட எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இருந்தாலும் விலைவாசி உயரும்போது மத்திய அரசும் மாநில அரசுகளும் சில நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கின்றன. இந்திய ரிசர்வ் வங்கியும் தன் பங்குக்குப் பண சப்ளையைக் கட்டுப்படுத்துகிறது அல்லது வட்டி வீதத்தில் மாற்றம் செய்கிறது. உலகம் எங்கிலும் இதுவே நடைமுறையாக இருக்கிறது.

சமீபத்திய நடவடிக்கைகள்

கோவிட் – 19 பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யா மோதல், சீனாவில் மீண்டும் பொதுமுடக்கம் போன்றவற்றால் சந்தைகளில் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் விலையுயர்வும் வழக்கமாகின. இது இப்படியே உயர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சில்லறைப் பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு விகிதம்) 7.8 சதவீதமாகவும் மொத்தவிலை உயர்வு விகிதம் 15 சதவீதமாகவும் அதிகரித்தன. இதனால் அனைத்துத் துறைகளிலும் இடுபொருள் செலவுகள் உயர்ந்தன. மூலதனச் செலவை அதிகப்படுத்தி பொருளாதார நடவடிக்கைகளை வேகப்படுத்த நினைத்த மத்திய அரசுக்கே இந்த விலையுயர்வு, திட்டங்களின் செலவுகளில் எதிரொலிக்கத் தொடங்கியது. திட்டமிட்டபடி செலவிட்டு வேலைகளை முடிக்க முடியாது என்று தெரிந்ததும் விலைவாசியைக் குறைக்க முன்னுரிமை அளித்தது அரசு.

முதல் கட்டமாக, வங்கிகளுக்குத் தரும் பணத்துக்கான வட்டி வீதத்தை (ரெப்போ ரேட்) 0.4 சதவீதம் அதிகரித்தது ரிசர்வ் வங்கி. அத்துடன் வங்கிகள் தாங்கள் திரட்டும் டெபாசிட்டுகளுக்கு ஏற்பக் கைவசம் வைத்துக்கொள்ளக்கூடிய ரொக்க இருப்பு விகிதத்தை 0.5 சதவீதம் குறைத்தது. இதனால் ஊக வியாபாரிகளுக்குக் கடனாகப் பணம் கிடைப்பது குறையும். அத்துடன் அவர்கள் வங்கிகளில் பணம் பெற்று வியாபாரத்துக்கு முதலீடு செய்தாலும் லாப விகிதமும் குறையும். எனவே பதுக்கலும் ஊக வியாபாரமும் குறையும் என்பது அரசுத் தரப்பின் எதிர்பார்ப்பு. ஊக வியாபாரிகளும் பதுக்கல்காரர்களும் ரொக்கத்தை வங்கிகளிடம் பெற்றுத்தான் முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலையில் இல்லை. அவர்கள் கைவசம் கணக்கில் காட்டாத பணம் கோடிக்கணக்கில் இருக்கிறது. இருந்தாலும் அரசு சந்தையைக் கண்காணிக்கிறது என்ற உணர்வே ஊக வியாபாரிகளைக் கட்டுப்படுத்துகிறது.

வட இந்தியாவில் (சமீபத்தில் தமிழ்நாட்டிலும்) வீசும் வெப்ப அலையால் காய்கறிகளும் பழங்களும் வேகமாகக் கெட்டுப்போவதால் சந்தைக்கு வரும் அளவு குறைந்து விலை அதிகரித்தது. இதற்குத்தான் அரசு விளைச்சல் மையங்களிலேயே மிகப் பெரிய குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க திட்டமிடுகிறது. அரசிடம் முதலீட்டுக்குப் பணம் இல்லாததால் பெருந்தொழில் நிறுவனங்களை ஈடுபடுத்த நினைக்கிறது.

பெட்ரோல் மீது லிட்டருக்கு 8 ரூபாய், டீசலுக்கு 6 ரூபாய் கூடுதல் உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது இந்த நோக்கத்தில்தான். இதனால் அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல். ஆனால் நுகர்வு தூண்டப்படுவதால் இந்தத் தொகையில் கணிசமான அளவு அரசுக்கு மறைமுக வரிகள் மூலம் திரும்பக் கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசைப் பின்பற்றி எதிர்க்கட்சிகள் ஆளும் கேரளம், ராஜஸ்தான், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் விற்பனை வரியைக் குறைத்துள்ளன. இதனால் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்களை எடுத்து வருவதற்கும் உற்பத்தியானவற்றை சந்தைக்கும் துறைமுகங்களுக்கும் கொண்டு செல்வதற்கும் போக்குவரத்துச் செலவு குறையும்.

உருக்கு, பிளாஸ்டிக் பொருட்களின் முக்கியத்துவம் கருதி அவற்றின் மூலப்பொருட்கள் மீதான இறக்குமதித் தீர்வையையும் அரசு குறைத்திருக்கிறது. அதே வேளையில், சிலவகை உருக்குப் பொருட்களையும் இரும்பு கனிமங்களையும் ஏற்றுமதி செய்வதைக் குறைக்கும் வகையில் அவற்றின் மீது ஏற்றுமதித் தீர்வையை விதித்திருக்கிறது. இதனால் உள்நாட்டுத் தேவைக்கு போதிய உருக்கு, இரும்பு கனிமங்கள் கிடைக்கும்.

சமையல் எண்ணெய் விலை உயர்வு இல்லத்தரசிகளால் முதலில் உணரப்படுகிறது. இது குடும்பங்களின் செலவை அதிகப்படுத்தும். எனவே கச்சா சோயாபீன்ஸ் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை மொத்தம் 20 லட்சம் டன் அளவுக்கு இறக்குமதித் தீர்வையே இல்லாமல் இறக்குமதி செய்துகொள்ள அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் சமையல் எண்ணெய் விலையும் குறையும். உள்நாட்டில் உள்ள சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வேலையும் கிடைக்கும்.

வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் ஏழைகளுக்கு, ‘உஜ்வலா’ திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயுவுக்கு கட்டணமில்லா இணைப்பு வழங்கியது அரசு. ஆனால் சமையல் எரிவாயு உருளையை அவர்கள் விலை கொடுத்துத்தான் வாங்கினர். விலை அதிகரித்தபோது அவர்களில் பெரும்பாலானவர்கள் சமையல் எரிவாயு வாங்குவதை நிறுத்திவிட்டு பழையபடி விறகு, சுள்ளிகளை வைத்து சமைக்க முற்பட்டனர். இதனால் இந்த வகை 9 கோடி பயனாளிகளுக்கும் சிலிண்டருக்கு சமையல் எரிவாயு விலையை தலா 200 ரூபாய் குறைத்திருக்கிறது மத்திய அரசு. இதறுகுப் பிறகும் கூட அவர்களில் கணிசமானவர்களால் வாங்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். விலை குறைந்துவிட்டது என்று உளவியல் ரீதியாக எண்ணி பலர் மீண்டும் சமையல் எரிவாயுவுக்குத் திரும்புவார்கள்.

கோதுமை ஏற்றுமதிக்கு அரசு திடீரென தடை அறிவித்தது. அதற்குக் காரணம் இந்தியாவில் விளைச்சலும் அதிகம், கையிருப்பும் அதிகம் என்றதும் சர்வதேச தானியச் சந்தை வியாபாரிகளும் இடைத் தரகர்களும் இந்திய வியாபாரிகளையும் தரகர்களையும் தொடர்புகொள்ளத் தொடங்கினர். இதையடுத்து சந்தையில் கோதுமையின் மொத்த விலையே கிடுகிடுவென உயர்ந்தது. விளைச்சலும் கையிருப்பும் அதிகம், நுகர்வில் மாற்றமில்லை என்றபோது இந்த விலையுயர்வு ஊக வியாபாரத்தால்தான் என்று தெரிந்துகொண்ட அரசு, ஏற்றுமதியைத் தடை செய்வதாக அறிவித்தது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்று சிலர் குரல் எழுப்பினர். இந்த விலையுயர்வுகளின் பலன் எப்போதும் விவசாயிகளுக்கு சென்று சேராது, வியாபாரிகளும் இடைத் தரகர்களும்தான் லாபம் சம்பாதிப்பார்கள். எனவே அரசு இந்தத் தடையிலும் சில விதிவிலக்குகளை அறிவித்திருப்பதுடன், எவ்வளவு ஏற்றுமதி செய்யலாம் என்று உச்ச வரம்பும் விதித்திருக்கிறது. அதாவது உள்நாட்டின் மொத்தத் தேவைக்கு தானியத்தை நிறுத்திக்கொண்டு, உபரியை மட்டும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது. இதனால் எதிர்காலத்தில் தானியத் தட்டுப்பாடோ, கடும் விலையுயர்வோ இருக்காது.

உர மானியம்

விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன உரங்களில் பெருமளவு இறக்குமதி மூலம்தான் பெறப்படுகிறது. இந்த உரங்களுக்கு அரசு மானியம் தருகிறது. அந்த மானியத்துக்காக பட்ஜெட்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இப்போது ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உரங்கள் விலை கடுமையாக உயர்ந்துவிட்டதால் உர மானியத்துக்கு அரசு மேலும் 1.1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறது. ‘இந்த உர மானியத்தை அரசு படிப்படியாகக் குறைக்க வேண்டும், உர மானியத்தை ஆலைகளுக்குத் தரும் நடைமுறையைக் கைவிட வேண்டும், அதற்குப் பதிலாக விவசாயிகளின் கொள்முதல் விலையை உயர்த்தி அதிலேயே உரத்துக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்துவிட்டால் விவசாயிகள் இயற்கை உரம் தயாரித்துப் பயன்படுத்துவார்கள் அல்லது அதிக உரம் தேவைப்படாத மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்’ என்று விவசாய நிபுணர் குழுக்கள் பரிந்துரை செய்துள்ளன. விவசாய சங்கங்கள் தங்களுக்குள் இது குறித்து விவாதித்து முடிவுக்கு வரும்வரை இந்த உர மானியத்தைத் தொடர வேண்டிய நிலையில் அரசு இருக்கிறது. இதில் விரயமும் ஊழலும் நடைபெறவே வாய்ப்புகள் அதிகம். இந்த மானியம், விவசாயிகளைவிட உர நிறுவனங்களுக்கே அதிக லாபத்தைத் தருகிறது.

இப்படி மத்திய அரசு நடவடிக்கை எடுத்ததைப் போல சில மாநில அரசுகளும் விலை குறைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in