தாஜ்பூர் துறைமுகம் உருவாக்க அதானி குழுமத்துக்கு அனுமதி: மம்தா அரசு பச்சைக்கொடி!

தாஜ்பூர் துறைமுகம் உருவாக்க அதானி குழுமத்துக்கு அனுமதி: மம்தா அரசு பச்சைக்கொடி!

பூர்வ மேதினிபூர் மாவட்டத்தில் தாஜ்பூர் நகரில் ஆழ்கடல் பகுதியில் துறைமுகம் அமைக்க கவுதம் அதானியின் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு. 25,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் இது.

2021 டிசம்பர் மாதம், மம்தா பானர்ஜியைச் சந்தித்துப் பேசிய கவுதம் அதானி, மேற்கு வங்கத்தில் முதலீடு செய்வது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வங்க உலக வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்ட அதானி குழுமம், துறைமுகக் கட்டுமான மேம்பாடு, கடலுக்கு அடியில் கேபிள் அமைப்பது, கிடங்குகள் அமைப்பது உள்ளிட்டவற்றுக்காக 10,000 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்தது.

இதையடுத்து, தாஜ்பூர் நகரில் துறைமுகம் அமைப்பது தொடர்பாக. கடந்த மார்ச் மாதம் மேற்கு வங்க அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஏலத்தில் அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம், அதிக ஏலத்தொகையுடன் முதன்மையாக வந்தது. எனினும், சில சட்டச் சிக்கல்கள் காரணமாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று (செப்.19) மேற்கு வங்க அமைச்சரவையில் அதானி குழுமத்துக்கு அனுமதி கடிதம் வழங்க முடிவெடுக்கப்பட்டது.

1960-களில் ஹல்தியா டாக் காம்ப்ளெக்ஸ் எனும் துறைமுகம், க்ரீன்ஃபீல்டு துறைமுகமாக அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அமைக்கப்படவிருக்கும் முதல் க்ரீன்ஃபீல்டு துறைமுகம் இதுதான்.

இந்தத் திட்டத்தின் மூலம், புருலியா மாவட்டத்தின் ரகுநாத்பூர் மற்றும் ஹூக்ளி மாவட்டத்தின் தான்குனி பகுதிக்கு இடையே தொழில் துறை மற்றும் பொருளாதாரப் பாதை அமைக்க மேற்கு வங்க அரசு திட்டமிடுகிறது. இந்தத் துறைமுகம் அமைக்கப்பட்டால், கடந்த அரை நூற்றாண்டில் தொடங்கப்படும் முதல் க்ரீன்ஃபீல்டு துறைமுகமாக இது இருக்கும்.

உள்நாட்டுத் தொழில் துறைக்கும், வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் ஒரு பாலமாக இந்தத் துறைமுகம் அமையும் எனத் தெரிவித்திருக்கும் மேற்கு வங்க அரசு, இதன் மூலம் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in