தாலி கட்டும் முன் மாப்பிள்ளை பலி: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் சோகம்

விபத்து
விபத்து

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், பொட்டல்காடைச் சேர்ந்தவர் மாரியப்பன். உப்பளத் தொழிலாளியாக உள்ளார். இவரது மகன் ஜெகதீஷ்(26) இவருக்கும் பழையகாயல் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இன்று காலையில் ஜெகதீஷ்க்கும், அந்தப் பெண்ணுக்கும் திருமணம் நடப்பதாக இருந்தது. 9 மணிக்கு முகூர்த்த நேரம் என்பதால் வீட்டில் தயாராகிக் கொண்டிருந்த ஜெகதீஷ், திடீரென காலை 6.30 மணிக்கு தன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.

தூத்துக்குடி துறைமுகம் புறவழிச்சாலை உப்பாற்றுப்பாலம் ஓடை அருகில் வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஜெகதீஷ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து உயிர் இழந்த ஜெகதீஷின் தந்தை மாரியப்பன் கூறுகையில், “காலை 9.30 மணிக்கு திருமண முகூர்த்தத்தை வைத்துக்கொண்டு ஏன் காலை 6.30 மணிக்கு வெளியில் போனார் என்றுத் தெரியவில்லை. யாரும் அழைத்து போனாரா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.”என்றார்.

திருமணத்திற்கு சில மணிநேரங்களே இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in