அரசுப் பள்ளிகளுக்கு உதவ ‘வித்யாஞ்சலி’ இணையதளம்

பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்
அரசுப் பள்ளிகளுக்கு உதவ ‘வித்யாஞ்சலி’ இணையதளம்
படம்: ஏஎஃப்பி

அரசுப் பள்ளிக்கூடங்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் அடித்தளக் கட்டமைப்புகளை மேம்படுத்த ‘வித்யாஞ்சலி’ என்ற புதிய இணையதளத்தை பிரதமர் மோடி இன்று (செப்டம்பர் 7) தொடங்கிவைத்தார்.

உதவிகள் தேவைப்படும் பள்ளிக்கூடங்கள் தங்களுடைய இருப்பிடம், தேவைகள் குறித்து இந்த இணையதளத்தில் விவரங்களைத் தெரிவிக்கலாம். இந்தப் பள்ளிக்கூடங்களுக்கு உதவ விரும்புவோர் உதவிகள் எப்படி செய்யப்படும் என்பதை இதில் அறிவிக்கலாம். இது அரசு பள்ளிகளின் தேவைகளுக்கும் புரவலர்களுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும். வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், நூலகம், கழிப்பறைகள், சமையலறை, விளையாட்டு மைதானம் போன்றவற்றை ஏற்படுத்தித் தர இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கல்வித் துறைக்கு உதவும் தன்னார்வலர்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில் நிறுவனங்கள் ஆகியவையும் இந்த இணையதளத்தால் உதவி கோரும் பள்ளிக்கூடங்களை எளிதில் அடையாளம் காண முடியும். நிதியோ, பொருட்களோ அளிக்க முடியாதவர்கள் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகளை அளிப்பது போன்ற உடலுழைப்பையும் மேற்கொள்ளலாம். ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், அறிவியல் அறிஞர்கள், அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், சுய வேலைவாய்ப்பு மூலம் வசதியாக இருப்பவர்கள், குடும்பத் தலைவிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தணிக்கையாளர்கள் என்று எவர் வேண்டுமானாலும் உதவுவோராக மாற இது தொடர்பு வசதிகளைச் செய்து தரும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in