
கரோனா காலகட்டத்தில் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளர்களாக பணி அமர்த்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா காலகட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களை ஒப்பந்த தொழிலாளர்களாக சென்னை மாநகராட்சி பணி அமர்த்தியது. ஆனால் அவர்களை தற்போது வரை சென்னை மாநகராட்சி பணி நிரந்தரம் செய்யவில்லை.
இதனைக் கண்டிக்கும் விதமாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் உண்ணாவிரத போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய போது, கரோனா காலக்கட்டத்தில் வெளியில் செல்லாமல் ஊரில் உள்ள அனைவரும் வீட்டுக்குள் இருந்தார்கள். நாங்கள் மட்டும்தான் வீடு வீடாக சென்று தூய்மைப் பணியை மேற்கொண்டோம். ஆனால் இப்போது எங்களுக்கு வேலை இல்லை என கூறுகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்புகின்றனர்.
தொடர்ந்து பேசிய அவர்கள், “குறைந்தபட்ச கூலியை கொடுக்கக்கூட சென்னை மாநகராட்சி தயாராக இல்லை என்பதே எங்களுக்கு வருத்தமாக உள்ளது. இதனால் எங்களுடைய வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் தலையிட வேண்டும். எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.