மன்னிப்பு கேட்காவிட்டால் கறுப்புக்கொடி காட்டுவோம்: பாஜக அமைச்சர் எல்.முருகனுக்கு பார்வர்ட் பிளாக் கட்சி எச்சரிக்கை

மன்னிப்பு கேட்காவிட்டால்  கறுப்புக்கொடி காட்டுவோம்: பாஜக அமைச்சர் எல்.முருகனுக்கு பார்வர்ட் பிளாக்  கட்சி எச்சரிக்கை

மன்னிப்பு கேட்காவிட்டால் இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவோம் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி எச்சரித்துள்ளது.

மதுரை விமான நிலையத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக்கின் தேசிய செயலாளர் கதிரவன் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், "மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 18- ம் தேதி நேதாஜி நினைவு நாள் என தெரிவித்து அஞ்சலி செலுத்துவோம் என மக்களுக்குத் தவறாக வழி நடத்தியது கண்டிக்கத்தக்கது.

இந்தியாவில் ஐந்து மாநிலங்களிலிருந்து பாதயாத்திரையாக சென்று நேதாஜியின் இறப்புக்கு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பிரதமரைச் சந்தித்தோம். இதனைத் தொடர்ந்து, ஓய்வு பெற்ற நீதிபதி மனோஜ் குமார் முகர்ஜியின் தலைமையில் குழு அமைத்து சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் நேதாஜி இருந்த அனைத்து இடங்களிலும் விசாரணை மேற்கொண்டனர்.

தைவான் அரசுக்கு, முகர்ஜி கமிஷன் கடிதம் அனுப்பியது. அதில், 1945 ஆகஸ்ட் 17-ம் தேதி விமான விபத்து நடக்கவே இல்லை என்றும், நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்று முகர்ஜி விசாரணைக் குழு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. இவை தெரியாமல் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கட்சியின் கொள்கையும் தெரியாமல், அரசின் நிலைப்பாடு தெரியாமல் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்துவதற்காக இது போன்ற கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இதனை வாபஸ் பெற வேண்டும். இதற்காக இந்திய மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

அமைச்சர் எல். முருகன் இந்த செய்தியை வாபஸ் பெற வேண்டும். இல்லையென்றால், இந்தியா முழுவதும் எங்கு சென்றாலும் எல். முருகனுக்கு எதிராக பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக கறுப்புக்கொடி காட்டப்படும்" என்றார்.

மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டுவோம் எனக் கூறினார். அதன்படி செயல்படுத்துவார் இல்லையெனில் செயல்படுத்த வைப்போம்" என்று பதிலளித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in