முதலீடு செய்த 3 மாதத்தில் 5 மடங்காக தருவோம்: ஆசைகாட்டி மக்களை ஏமாற்றிய 17 பேர் சிக்கினர்!

முதலீடு செய்த 3 மாதத்தில் 5 மடங்காக தருவோம்: ஆசைகாட்டி மக்களை ஏமாற்றிய 17 பேர் சிக்கினர்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கும் மக்களிடம், தங்களிடம் முதலீடு செய்தால், மூன்றே மாதத்தில் ஐந்து மடங்காகத் திருப்பிக் கிடைக்கும் என நூதனமுறையில் மோசடி செய்த கும்பலைப் போலீஸார் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட பொருள்கள்
மீட்கப்பட்ட பொருள்கள்

கன்னியாகுமரி, வடக்குக் குண்டல் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஒரு கும்பல் தங்கியிருந்தது. இவர்களைத் தினமும் அதிகமானோர் சந்திக்க வருவதும், திரும்பிச் செல்வதுமாக இருந்தது. இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கொடுத்த தகவலின்பேரில் கன்னியாகுமரி டி.எஸ்.பி ராஜா தலைமையில் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை செய்தனர். போலீஸாரைப் பார்த்ததும் அங்கே தங்கியிருந்தவர்கள் ஓட்டம் எடுத்தனர்.

அதில் போலீஸார் கையில் பேரையூரைச் சேர்ந்த சுந்தரபாண்டியன்(37) உள்பட 17 பேர் சிக்கினர். அவர்களில் இருவர் பெண்கள் ஆவார். இந்தக் கும்பல் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களின் மூலம் தங்களை விளம்பரப்படுத்தி தங்களிடம் முதலீடு செய்யும் பணம், மூன்றுமாதங்களில் ஐந்து மடங்காகத் திருப்பிக் கிடைக்கும் என வலைவிரித்துள்ளனர். இதை நம்பி இந்தியாவின் பல்வேறு பகுதியில் இருந்தும் பலரும் லட்சக்கணக்கானப் பணத்தைக் கொடுத்துள்ளனர். இதுகுறித்துத் தெரியவந்ததும் கன்னியாகுமரி போலீஸார் 17 பேரையும் கைது செய்தனர்.

எஸ்.பி ஹரி கிரன் பிரசாத் பேட்டி
எஸ்.பி ஹரி கிரன் பிரசாத் பேட்டி

இச்சம்பவம் குறித்து கன்னியாகுமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் இன்று மதியம் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது, “மொத்தம் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொஞ்சும் குரலில் வாடிக்கையாளர்களிடம் பேசி சமூகவலைதளங்களின் மூலம் ஆள்பிடித்துள்ளனர். மூளை சலவை தான் பிரதானமாக இருந்துள்ளது. இந்த கும்பலின் மூன்று, மற்றும் நான்கு சக்கர வாகனங்களும், 11 லட்சம் ரொக்கப்பணம், மோசடியாக பயன்படுத்தப்பட்ட விண்ணப்ப படிவங்கள், செல்போன், லேப்டாப், ஸ்கேனர், பிரிண்டர், இ சைன் போர்டு, கணினி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் யார், யாரிடம் எவ்வளவு மோசடி செய்தார்கள் என்பது குறித்துத் தொடர் விசாரணை நடந்துவருகின்றது’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in