நீதிமன்றம், காவல்துறை தலையீட்டால் பணத்தை இழந்தோம்: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

நீதிமன்றம், காவல்துறை தலையீட்டால் பணத்தை இழந்தோம்: ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு

நீதிமன்றம் மற்றும் காவல்துறை தலையீட்டால் பணத்தை இழந்தோம் என்று ஆருத்ரா கோல்டு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஆருத்ரா கோல்ட் நிறுவனத்தில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் பத்தாயிரம் வீதம் 10 மாதத்திற்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தனர். இது தொடர்பாக, பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்நிறுவனத்தில் சோதனை நடத்தியதுடன் நிர்வாகிகள் இருவரை கைது செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர் ராஜசேகரன் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதற்கு, வருவாய்த்துறை மூலம் பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்கியது.

மேலும் சுமார் 1600 கோடி ரூபாயை பொதுமக்கள் இந்நிறுவனத்தில் முதலீடு உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ள நிலையில், மாவட்ட வருவாய் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஆருத்ரா நிறுவனத்தில் முதலீடு செய்த பண விவரங்களை மனுவாக கொடுத்து டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு முதலீட்டாளர்கள் வரவழைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 1500 பேருக்கு டோக்கன் வழங்க வேண்டும் என்ற திட்டத்தின் அடிப்படையில் ஆர்டிஓ தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறையினர் உட்பட 100 பேர் புகார்தாரர்களிடம் மனுவைப் பெற்று பதிவு செய்து டோக்கன் வழங்கி வருகின்றனர்.
திரண்ட முதலீட்டாளர்கள்
ஆனால், தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 2,500-க்கு மேற்பட்டோர் ஒரே நாளில் திரண்டு வந்ததால் வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளால் சமாளிக்காத முடியாத சூழல் ஏற்பட்டது. மேலும் காலையில் இருந்தே தங்களுக்கு டோக்கன் கொடுக்காமல் அலைக்கழிப்பதாக தெரிவித்த முதலீட்டாளர்களில் ஒரு சிலர் திடீரென ராஜரத்தினம் மைதானம் அமைந்துள்ள டாக்டர் லட்சுமிபதி ருக்மணி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து 50 பேர் கொண்ட வருவாய் துறை அதிகாரிகள் பதிவு செய்த டோக்கன் வழங்கி வருவதாகவும், பணத்தை முதலீடு செய்த பொதுமக்கள் காத்திருந்து டோக்கன் பெற்று கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் வருகிற 5-ம் தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

இது குறித்து முதலீட்டாளர்கள் கூறுகையில், " ஆருத்ரா விவகாரத்தில் காவல்துறையும், நீதிமன்றமும் ஏன் தலையிடுகிறது? அவர்கள் தலையீட்டால் தான் தங்களுக்கு வரவேண்டிய பணம் நின்றுவிட்டது. மேலும் அந்த நிறுவனமே தங்களை ஏமாற்றாமல் பணத்தை கொடுத்து விடும்" எனக் கூறினர். இதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆடியோவில் குற்றச்சாட்டு

இந்த நிலையில், ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்காக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " நீதிமன்ற உத்தரவுப்படி வருவாய் துறையினருடன் சேர்ந்து உரியவர்கள் அனைவருக்கும் 100 சதவீத பணத்தை திருப்பி தருவோம். பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீஸார் சோதனையின் போது பல இடங்களில் இருந்து பெரும் தொகை கைப்பற்றியுள்ளனர். ஆனால் அந்தப் பணத்தை கணக்கில் காட்டப்படவில்லை" என்ற பரபரப்பு குற்றச்சாட்டை அவர் வெளியிட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஏற்கனவே, ஆருத்ரா வழக்கை விசாரித்து வந்த அதிகாரிகள் மீது முறைகேடு புகார் எழுந்ததை அடுத்து நான்கு அதிகாரிகள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். இந்த நிலையில், ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகரின் இந்த குற்றச்சாட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in