'நாங்கள் தான் சஞ்சயைக் கொன்றோம்': ஆயுதங்களுடன் சோஷியல் மீடியாவில் பதிவிட்ட கொலையாளிகளால் பரபரப்பு

ராஜஸ்தானில் வாலிபர் சுட்டுக்கொலை
ராஜஸ்தானில் வாலிபர் சுட்டுக்கொலை'நாங்கள் தான் சஞ்சயைக் கொன்றோம்': ஆயுதங்களுடன் சோஷியல் மீடியாவில் பதிவிட்ட கொலையாளிகளால் பரபரப்பு

கோயில் அருகே வாலிபரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கும்பல், நாங்கள் தான் இந்தக் கொலையைச் செய்தோம் என சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் பதிவிட்டுள்ளது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அல்வர் மாவட்டத்தில் பிவாடியில் உள்ளது கோஹ்ரி கிராமம். இங்குள்ள கோயில் அருகே நேற்று முன்தினம் வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி மூன்று பேர் கொண்ட கும்பல் ஆறுமுறை துப்பாக்கியால் சுட்டது. இதில் படுகாயமடைந்த வாலிபரை,அவரது உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸார் கொலை செய்ப்பட்டவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கோஹ்ரி கிராமத்தை சேர்ந்த சஞ்சய் முன்னா என்பது தெரிய வந்தது.

இக்கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திய போது முன்விரோதம் காரணமாக சஞ்சய் முன்னா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. கடந்த 2017-ம் ஆண்டு கோயில் திருவிழாவின் போது சஞ்சய் முன்னாவிற்கும், சில இளைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டதன் காரணமாக இக்கொலை நடந்தது என்று விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை போலீஸார் கைது செய்யச் சென்ற போது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த நிலையில், சஞ்சய் முன்னாவை கொலை செய்த கொலையாளிகள், சஞ்சய் முன்னாவை நாங்கள் தான் கொலை செய்தோம் என்று ஆயுதங்களோடு இருப்பது போன்ற புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் இன்று பதிவிட்டுள்ளனர். இதனால் அல்வர் மாவட்ட போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து பிவாடி எஸ்பி அனில் குமார் பெனிவால் கூறுகையில், "குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், எங்கள் சைபர் செல் மற்றும் குழுக்கள் தொடர்ந்து அவர்களைச் சுற்றி வளைத்து வருகின்றன, விரைவில் குற்றவாளிகள் போலீஸ் காவலில் இருப்பார்கள்" என்றார். முன்விரோதம் காரணமாக வாலிபரை சுட்டுக்கொலை செய்த கும்பல், அதுகுறித்த தகவலை சோஷியல் மீடியாவில் பதிவிட்ட சம்பவம் ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in