திருமணமான பெண்ணோடு தொடர்பு வேண்டாம்: எச்சரிக்கையை மீறிய வாலிபர் கொலை

 கொலை
கொலை திருமணமான பெண்ணோடு தொடர்பு வேண்டாம்: எச்சரிக்கையை மீறிய வாலிபர் கொலை

தன் நண்பரின் மனைவியுடன் இருந்த கூடாநட்பைக் கைவிடாத மறுத்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சிவகாசி வாலிபரை கொலை செய்ததாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி(36). இவர் சிவகாசியில் உள்ள சாம்பிராணி கம்பெனி ஒன்றில் வேலைசெய்து வந்தார். இவர் நேற்று இரவு வேலைமுடிந்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல், சுந்தரபாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பி ஓடியது. அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும்வழியிலேயே சுந்தரபாண்டி பரிதாபமாக உயிர் இழந்தார்.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் சிவகாசி கிழக்குப் போலீஸார் விசாரித்தனர். இதில் அதேபகுதியைச் சேர்ந்த சாமுவேல், கண்ணன், சுருட்டைக் குமார், வீரபுத்திரன், குட்டை ஆனந்த் ஆகிய 5 பேரும் சேர்ந்து சுந்தரபாண்டியை கொலை செய்வது பதிவாகி இருந்தது. இதில் வீரபுத்திரனை சிவகாசி கிழக்குப் போலீஸார் இன்று கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற நான்கு பேரைத் தேடி வருகின்றனர்.

வீரபத்திரன் போலீஸாருக்குக் கொடுத்த வாக்குமூலத்தில், “எங்களது நண்பர் சந்திரன் என்பவரின் மனைவிக்கும், சுந்தரபாண்டிக்கும் இடையே கூடாநட்பு இருந்துள்து. இதுகுறித்து எங்களிடம் சொல்லி சந்திரன் வருத்தப்பட்டார். இதைத் தொடர்ந்து நானும், சாமுவேல், கண்ணன், குட்டை ஆனந்த், சுருட்டைக்குமார் ஆகியோர் சேர்ந்து இந்த உறவைக் கைவிடவும், சந்திரனை நிம்மதியாக வாழ விடும்மாறும் சுந்தரபாண்டியனிடம் பேசிப் பார்த்தோம். ஆனால், சுந்தரபாண்டி அதற்கு ஒத்துவரவில்லை. அதனால் கொலை செய்தோம்” எனக்கூறியுள்ளார். கூடா நட்பை விட மறுத்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in