`வேலை தருகிறோம்; இவர்களுக்கு 15 லட்சம் கொடுக்கிறோம்'- போராட்டத்தால் பணிந்தது என்எல்சி

`வேலை தருகிறோம்; இவர்களுக்கு 15 லட்சம் கொடுக்கிறோம்'- போராட்டத்தால் பணிந்தது என்எல்சி

"என்எல்சி விரிவாக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், வேலை பெற விரும்பாதவர்களுக்கு 15 லட்சம் வரை 3 தவணைகளாக வழங்க என்எல்சி நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

1956-ம் ஆண்டு என்எல்சி நிர்வாகம் தொடங்கப்பட்டபோது சுமார் 44 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து வீடு, நிலம் கையகப்படுத்தி என்எல்சி நிர்வாகம் தொடங்கப்பட்டது. கடந்த 66 ஆண்டுகளில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பும் உரிய இழப்பீட்டுத் தொகையோ என்எல்சி நிர்வாகம் வழங்காமல் இருந்து வருகிறது.

மேலும், என்எல்சி நிர்வாகம் நிலக்கரி தோண்டுவதன் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எதிராக செயல்படும் என்எல்சி நிர்வாகம் எங்களுக்கு தேவையில்லை என்றும் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வழங்காமல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவனும், வேல்முருகனும், "என்எல்சி விரிவாக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பும், 1 ஏக்கர் நிலத்திற்கு 1 கோடி இழப்பீடும் வழங்க வேண்டும் என்னும் கோரிக்கையை முன்வைத்து விசிக, தவாக, இடதுசாரி கட்சிகளை ஒருங்கிணைத்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். என்.எல்.சி விரிவாக்கத்தில் பாதிக்கப்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி மக்களின் பிரச்சினையை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்செல்வோம்" என்று கூறினர்.

இந்த நிலையில், "நெய்வேலி என்எல்சி நில எடுப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வழங்கப்படும். வேலைவாய்ப்பு பயிற்சி, உரிய இழப்பீடு வழங்க என்எல்சி முன்வந்துள்ளது. வேலையில் சேர விரும்பாதவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகை 7,000 ரூபாய் வழங்கப்படும். முதுநிலை வரிசையில் கணக்கிடப்பட்டு வெளிப்படை தன்மையுடன் வேலை வாய்ப்பு வழங்கப்படும். வேலை பெற விரும்பாதவர்களுக்கு 15 லட்சம் வரை 3 தவணைகளாக வழங்கப்படும்" என்று கடலூர் ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in