`இப்படி நடந்தால் 15 ஆண்டுக்குள் சிறு வியாபாரிகள் துடைத்தெறியப்படுவார்கள்'- விக்கிரமராஜா கவலை

`இப்படி நடந்தால் 15 ஆண்டுக்குள் சிறு வியாபாரிகள் துடைத்தெறியப்படுவார்கள்'- விக்கிரமராஜா கவலை

சாதாரண வணிக குடும்பத்தில் இருந்து வந்தவர் பிரதமர் அவருக்கு வணிகர்களின் கஷ்டம் நஷ்டங்கள் புரியும் என்றும் அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 2022-ம் ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் கோவை ஈச்சனாரி செல்வம் மஹாலில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வணிகர்கள், பொதுமக்கள் நலன் சார்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில முழுவதும் இருந்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட நிர்வாகிகள் இணைப்பு வணிக சங்க நிர்வாகிகள் சுமார் 3000 பேர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், "நாடு முழுவதும் உற்பத்தியாளர்களிடம் இருந்து சிறு வியாபாரிகள் பொருட்கள் வாங்கி விற்பனை செய்யப்படும் போது விலை வித்தியாசப்படுகிறது. இந்த விலையேற்றத்தை தடுக்க ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு, ஒரே தேர்தல் என்ற வலியுறுத்தலின் பேரில் உற்பத்தியாளர்கள் ஒரே விலையில் தான் வியாபாரிகளிடம் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற சட்டத்தை பிரதமர் கொண்டு வர வேண்டும். அப்படி விலை தவறும் பட்சத்தில், தமிழகத்தில் மட்டும் 1 கோடி பேர் வணிகர்களை சார்ந்து இருக்கிறார்கள். நாடு முழுவதும் வணிகர்களை சார்ந்து 21 கோடி பேர் இருக்கிறார்கள். அவர்களின் நிலை, வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறிவிடும்.

மத்திய அரசு சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காவிட்டால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் சிறு வியாபாரிகள் துடைத்து எறியப்படுவார்கள். வியாபாரிகளுக்கான சட்டப்பிரச்சினைகள், உணவு பாதுகாப்பு சட்டத்தில் மாற்றம், வணிக வரித்துறையில் மாற்றம் போன்ற பிரச்சினைகள் தொடர்பாக டெல்லியில் துறை அமைச்சர்கள், பிரதமர் ஆகியோரை சந்திக்க உள்ளோம். பிரதமரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. சாதாரண வணிக குடும்பத்தில் இருந்து வந்தவர் பிரதமர். அவருக்கு வணிகர்களின் கஷ்டம் நஷ்டங்கள் புரியும். மத்திய வணிகவரித்துறை அமைச்சரை சந்திக்க முயற்சி மேற்கொண்டதில் அவரது அலுவலகத்தில் இருந்து ஒரு காலத்திற்குள் அழைப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in