கள்ளக்காதலால் கொல்லப்பட்ட நிதிநிறுவன ஊழியர்: உடலைத்தேட அணையில் தண்ணீர் நிறுத்தம்

கொலை செய்யப்பட்ட பிரகாஷ்
கொலை செய்யப்பட்ட பிரகாஷ்

திருமணத்தை மீறிய உறவால் கொலை செய்யப்பட்ட நிதி நிறுவன ஊழியர் உடலைத் தேட முல்லைப்பெரியாறு அணையில் இன்று தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் கூலத்தேவர் முக்குத் தெருவைச் சேர்ந்தவர் பொம்மையன் மகன் பிரகாஷ் (34). இவரது மனைவி கனிமொழி. பிரகாஷ் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில், கடந்த 21-ம் தேதி தனது கணவரைக் காணவில்லையென கனிமொழி கம்பம் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், காணாமல் போன பிரகாஷின் செல்போன் எண்ணைக்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அதே தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமார் (34) மற்றும் அவரது மனைவி நித்யா (25) ஆகியோருடன் பிரகாஷ் செல்போனில் அடிக்கடி பேசியது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது நித்யாவிற்கும் ,பிரகாஷிற்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில்,செப். 21-ம் தேதி நள்ளிரவில் பிரகாஷை வீட்டிற்கு நித்யா வரச்சொல்லியுள்ளார். அவர்கள் இருவரும் தனிமையில் இருந்த போது நித்யாவின் கணவர் வினோத்குமார் வந்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பிரகாஷின் கழுத்தை துணியால் இறுக்கிக்கொலை செய்துள்ளார். அத்துடன் பிரகாஷின் உடலைக் கொண்டு செல்ல தனது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் என்பவரை அழைத்துள்ளார். இதன் பின் நித்யா, வினோத்குமார், ரமேஷ் ஆகியோர் பிரகாஷின் உடலை ஆட்டோவில் ஏற்றிச் சென்று கம்பம் அருகே உள்ள உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் வீசியது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து நித்யா, அவரது கணவர் வினோத்குமார், ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் ஆகியோரை செப். 24-ம் தேதி கம்பம் தெற்கு போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து பிரகாஷின் உடலை முல்லை பெரியாற்றில் தீயணைப்புத் துறையின் உதவியுடன் போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால், 58-ம் கால்வாய்க்கு தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்ததால் பிரகாஷின் உடலைத் தேடும் பணி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் உத்தரவின்பேரில், முல்லைப் பெரியாற்றில் இருந்து வரும் தண்ணீர் இன்று காலையில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கம்பம் தெற்கு காவல் போலீஸார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் உத்தமபாளையத்திலிருந்து வைகை அணை வரை பெரியாற்றில் உள்ள தடுப்பணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரகாஷின் உடலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in