சோழர் கால ஏரிப் பராமரிப்பு சொல்லும் முக்கியப் பாடம்!

சோழர் கால ஏரிப் பராமரிப்பு சொல்லும் முக்கியப் பாடம்!

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் சதய நட்சத்திரத்தில், ராஜராஜ சோழனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் 1037-வது சதய விழா கொண்டாட்டம், நவம்பர் 2 முதல் தஞ்சாவூரில் ஒரு வாரம் நடக்கிறது. மாவட்ட நிர்வாகமும், பொதுமக்களும் இதை மகிழ்வோடு கொண்டாடி சோழப் பேரரசின் சிறப்புகள் குறித்து பெருமிதம் கொள்கின்றனர்.

அதேசமயம், தமிழகத்தில் பெய்துவரும் மழையால் மழைநீர் தேங்குவது பெரும் பிரச்சினையாகத் தொடர்கிறது. இந்தச் சமயத்தில் சோழர் காலத்தில் நீர்நிலைகளில் தூர்வார எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி நினைவுகூருவது நல்லது.

பல துறைகளில் தடம் பதித்தது சோழர் ஆட்சிக்காலம். அதிலும் விரிந்துப் பரந்த சோழப் பேரரசின் நீர், நிலவளமை மிக முக்கியமானது. ஏரிப் பாசனத்திற்குப் பெயர்போன இவ்வரசில் ஏரிகளின் பராமரிப்பும் சிறந்திருந்தது.

இது போன்ற அனைத்துத் தகவல்களும் கல்வெட்டுகளில் தெளிவாகப் பதிவாகி உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை கோயில் கல்வெட்டுகளே. வரலாற்று விளிப்போடு இயங்கும் இன்றைய தமிழ் சமுதாயத்தின் பொதுப் புத்தியில் முன்னர் சொல்லிய தகவல்களில் பலவும் தெளிவாகப் பதிந்திருக்கலாம். இந்த வகையில், பிராமணர்கள் வாழ்ந்த பிரம்மதேய கிராமங்களில் ஏரி வாரியம் செயல்பட்டதை நாம் அனைவருமே அறிவோம். பராமரிப்பு, தூய்மையாக்கல், பாதுகாத்தல் ஏரி ஆயம் எனும் ஏரிவரி பெறுதல், கரைகளைச் சீரமைத்தல் என நீர் நிலைகள் தொடர்பான எல்லா பணிகளையும் மேற்பார்வை செய்தது இந்த ஏரி வாரியமே.

இப்பணிகளில் அமைந்த சில நுணுக்கங்கள் மட்டுமே நாம் அறிய வேண்டியது. வரும்முன் காப்பு எனும் அடிப்படைக் கொள்கையில் சோழப் பேரரசு கடைப்பிடித்த சில வழிமுறைகளை இங்கு காண்போம். குறிப்பாக ஏரி தூர்வாருதலை மட்டுமே பார்க்கலாம். இதற்குத் துணை நிற்பது இன்றைய புதுச்சேரியில் உள்ள பாகூர் கல்வெட்டு (புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், எண் 23). இவ்வூரில் திருமூலநாதர் கோயிலில் உள்ள முதலாம் இராஜேந்திரன் காலத்திய கல்வெட்டு (கி.பி. 1027) ஏரிப் பராமரிப்பு குறித்து கீழ்க்கண்டவாறு தெரிவிக்கிறது.

’உள்ளூர்வாசிகளும் வெளியூரிலிருந்து வந்து இவ்வூரில் பயிர் செய்வோரும் ஏரி வரியைத் தருவதுடன் ஏரியைத் தூர்வாரும் பணியிலும் ஈடுபட வேண்டும். இப்பணியில் பத்து வயதிற்கு மேற்பட்ட எண்பது வயதிற்கு உட்பட்டவர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் ஒவ்வொருவரும் ஒரு குழி மண்ணை அப்புறப்படுத்துவது கட்டாயம். அக்குழி நான்கு சாண் நீளமான அளவுகோலால் இரண்டுக்கு இரண்டு சதுரமாகவும் ஒரு கோல் ஆழமாகவும் அமைய வேண்டும்’ என்கிறது இந்தக் கல்வெட்டு. தூர்வாரும் பணியைச் செய்ய பட்டியலினச் சமூகத்தினருக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்த விதிகளுக்கு உடன்படாதவர்கள் அரசாணையை மீறியவர்களாகக் கருதப்படுவர். மேலும் அவர்களிடமிருந்து ஏரி வரியை வசூலிக்கும் ஏரி வாரியத்தோர் கால் கழஞ்சு பொன்னைத் தண்டனைத் தொகையாகப் பெறுவது அவசியம். அபராதத் தொகையை நேர்மையாகப் பெறாவிட்டால் ஏரி வாரியத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் தலா ஒரு கழஞ்சு பொன் அபராதத் தொகை விதிக்கப்படும். வரிப் பணத்தைத் தவறான முறையில் செலவு செய்பவர்கள், கையாடல் செய்பவர்கள் ஒரு பொன் கழஞ்சு அபராதம் விதிக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டது.

இந்த ஏரிவாரியமானது இதர வாரியங்ளைப் போன்றே ஒரு வருடத்திற்கு ஒரு முறை தேர்ந்ந்தெடுக்கப்பட்டடது. நாம் அறிந்த உத்திரமேரூர் சொல்லும் குடவோலை முறையில்தான் தேர்வு நடைபெற்றது. மக்களின் வரிப் பணத்தை மக்கள் நலனுக்குச் செலவிடுவதே முதன்மைப் பணியாக இருந்தது. அதன் பின் மிஞ்சும் பணமே மன்னனின் கருவூலத்திற்குச் சென்றது.

ஒரு சட்டம் விதிக்கப்படும்போதே மீறுபவர்களுக்கான தண்டனையும் நிர்ணயிக்கப்பட்டது. அடுத்தபடியாக வரி வசூலிக்கும் அதிகாரி தவறிழைத்தல், வரிப் பணத்தை தவறாகப் பயன்படுத்துதல், கையாடல் செய்தல் ஆகியவற்றுக்கான தண்டனையையும் அறிவித்தனர்.

’பதவி என்பது பொறுப்பு; தவறினால் தண்டனை’ என மிகத் தெளிவாக மக்களுக்குத் தெரிவித்தனர். எனவே துணிந்து தவறு செய்யலாம். நாளை யாரேனும் நீதிமன்றம் சென்றால் பார்த்துக்கொள்வோம் என எண்ணி அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடாத வகையில் சோழர்கள் சட்டம் விதித்தனர். இவ்வகையில் ஊழலும், பணவிரயமும், காலச் செலவும் தடுக்கப்படும் நோக்கில் சட்டங்கள் இருந்தன. அதேநேரத்தில் சட்டத்திலிருந்து தப்பும் ஓட்டைகளும் அடைக்கப்பட்டன.

ஏரியில் தூர்வாரும் ஒரு பணிக்காக ஏரியைக் காட்டிலும் ஆழமாகச் சிந்தித்து செயல்பட்டனர் சோழ மன்னர்கள். இன்றைய ஆட்சியாளர்கள் இதையெல்லாம் ஒரு பாடமாக எடுத்துக்கொண்டால், நாடு செழிக்கும்!

(கட்டுரையாளர்: அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in