
கோவையில் பறவைகள், விலங்குகள் தாகம் தீர்க்கும் காவல் நிலையங்களில் 100 தண்ணீர் கிண்ணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கோடை காலம் துவங்குவதற்கு முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பறவைகள், சாலைகளில் சுற்றித் திரியும் நாய்கள் போன்றவைகள் தண்ணீரைத் தேடி அலையும் நிலை உருவாகி வருகிறது. விலங்குகள் நல ஆர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் தங்களால் முடிந்த அளவு பறவைகள் மற்றும் இதர விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முயற்சியின் காரணமாக இந்த கோடையில் அனைத்து சமூக விலங்குகள் அதாவது நாய்கள், பூனைகள் மற்றும் பறவைகள் தாகத்தைத் தணிக்க கோவையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 100 தண்ணீர் கிண்ணங்கள் வைக்கப்பட்டுள்ளன.
போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த ‘வாட்டர் பவுல் சேலஞ்ச்’ செய்து வருகிறார். தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் இந்த மண் கிண்ணங்கள் வைக்கப்பட்டுள்ளன. தினமும் காலையில் இந்த கிண்ணங்களில் போலீஸார் தண்ணீர் நிரப்பி வைக்கின்றனர். அது குறையும் போது மீண்டும் தண்ணீர் நிரப்புகின்றனர். காவல்துறையின் இந்த பறவைகள், விலங்குகள் நேயச்செயல் அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டைப் பெற்றுள்ளது.