யாரும் கையால் அடிக்கவில்லை; தானாகவே தண்ணீர் கொட்டும் அடிப்பம்பு: ஆச்சரியத்தில் கிராம மக்கள்

அடிப்பம்பில் கொட்டும் நீர்
அடிப்பம்பில் கொட்டும் நீர்

கொள்ளிடத்தில் பாய்ந்தோடி வரும் வெள்ள நீரால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமத்தில் அடிப்பம்பில் அடிக்காமலே தானாகவே தண்ணீர் கொட்டும் சூழல் உருவாகியிருக்கிறது.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக காவிரியில் மேட்டூருக்கு வரும் மொத்த நீரும் அப்படியே ஆற்றில் திறந்து விடப்படுகிறது. இது முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆறு வழியாக கடலுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் கடந்த 10 தினங்களாக கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள நாதல் படுகை, சந்தப்படுகை முதலைமேடுதிட்டு, வெள்ளமணல் ஆகிய கிராமங்கள் வெள்ளை நீரால் சூழப்பட்டுள்ளன. இதனால் கொள்ளிடம் ஆற்றின் அருகில் உள்ள கிராமங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் நாதல்படுகை என்ற கிராமத்தில் உள்ள பாலு என்பவரது வீட்டில் பயன்படுத்திவரும்அடிப்பம்பின் மூலமாக நிலத்தடி நீர் யாரும் அடிக்காமலேயே தானாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. மின்மோட்டார் மூலம் நிலத்தடி நீரை வெளியே எடுத்தால் எவ்வளவு தண்ணீர் வருமோ அதே அளவுக்கு நிலத்தடி நீர் தானாக அடிப்பம்பின் வழியே வெளியேறிக் கொண்டிருக்கிறது. இதனை அனைவரும் அதிசயமாக வந்து பார்த்துச் செல்கின்றனர்.

ஆற்று வெள்ளம் வந்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட இந்த கிராமங்களில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதன் மூலம் அவர்களுக்கு நன்மையும் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இதன்காரணமாக அடுத்த சில வருடங்களுக்கு ஆற்றுப் படுகையில் நடக்கும் அவர்களின் விவசாயம் மிகவும் செழிப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in