`விருது இழிவையே அளிக்கும்'- சாகித்ய அகாடமி விருதாளரை விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகன்

ஜெயமோகன்
ஜெயமோகன்

சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் யுவ புரஸ்கார் விருது ப.காளிமுத்து எழுதிய `தனித்திருக்கும் அரளிகளின் மதியம்' என்னும் கவிதைத் தொகுப்பிற்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தன் முகநூல் பக்கத்தில் வீண் விருதுகள் என்னும் பெயரில் சாகித்ய அகாடமி விருதின் புகைப்படத்தைப் போட்டு இந்த கவிதை நூல் ஆசிரியர் காளிமுத்து குறித்து காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

சாகித்ய அகாடமி நிறுவனமானது 35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளுக்கு யுவ புரஸ்கார் விருதினை வழங்கி வருகிறது. கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல் என ஏதாவது ஒரு தளத்தில், ஒவ்வொரு பிராந்திய மொழிக்கும் ஒரு விருது வழங்கப்படும். இதன் பரிசுத்தொகை 50 ஆயிரம் ரூபாய். மத்திய அரசின், சாகித்ய அகாடமி நிறுவனம் வழங்கும் விருது என்பதால் இது மிகவும் உயரிய விருதாகப் பார்க்கப்படுகிறது.

நேற்று அறிவிக்கப்பட்ட பால புரஸ்கார் விருது கவிதை நூலுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் தன் முகநூல் பக்கத்தில், “ஓர் எழுத்தாளர் தன் தகுதியை நிரூபித்தபின் பெறும் விருதே அவருக்கு மெய்யான புகழை அளிக்கும். அவ்வண்ணம் தகுதி கொண்டபின் அவர் விருது பெறுகையில் அது சிலரால் காழ்ப்புடனோ, அறியாமையாலோ விமர்சிக்கப்பட்டால்கூட அதை அந்த எழுத்தாளர் பொருட்படுத்த மாட்டார். அவருக்கு தானிருக்கும் இடம் தெரியும்.

அவ்வண்ணம் இல்லாமல் பெறப்படும் விருது இழிவையே அளிக்கும். விருது பெறுபவர் சட்டென்று பலர் பார்வைக்கு வருகிறார். அவர்மேல் விழும் அக்கவனம் அவர் தகுதியற்றவர் என்றால் உடனடியாக கேலியாக மாறும். முழுநிராகரிப்பாக ஆகும். மெல்லிய அளவில் மதிப்புடன் இருந்தவர்கள்கூட தகுதியற்ற விருதை பெற்றபின் அவமதிப்படைந்து எவராலும் வாசிக்கப்படாதவர்கள் ஆவதை காணலாம்.

இந்த இளைஞர் இவ்விருதால் ஓர் அவமதிப்பையே அடைந்துள்ளார். இதை அவருக்கு அளித்தவர்கள் அவரை சிறுமை செய்கிறார்கள். அவர் தன் எழுத்து பற்றிய போலியான நம்பிக்கை கொள்ளச் செய்கிறார்கள். அவர் இலக்கியம் கற்று, தன்னை உணர்ந்து, எழுதுவதை நிரந்தரமாக தடை செய்கிறார்கள். தங்களுடைய ஏதோ சுயநலத்தின்பொருட்டு அவரை பலியிடுகிறார்கள். அந்த இளைஞர் இன்னும் ஐந்தாண்டுகளில் ஒருவேளை இலக்கிய அறிமுகம் அடையக்கூடும். நல்ல கவிதைகளும் எழுதக்கூடும். ஆனால் இனி அவர் மேல் அவநம்பிக்கையே சூழலில் நிலவும். அவரை வாசிக்க மாட்டார்கள். கூர்ந்து வாசிக்கப்படவில்லை என்றால் கவிதை தொடர்புறுத்துதலை இழக்கும் என்பதனால் அவருக்கு முழுமையான புறக்கணிப்பே எஞ்சும்.

அவருக்கு உண்மை உறைக்கும்படிச் சொல்லப்படவேண்டும். பொய்யான பாராட்டுக்கள் அவரை அழித்துவிடும். கவிதை என்பது அவர் எழுதுவது அல்ல. அத்தகைய வரிகளை எவரும் எங்கும் எழுதலாம். பல்லாயிரம்பேர் இங்கே அதைப்போல எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அவற்றை எழுதினால் அவர் அந்த பல்லாயிரவரில் ஒருவராகவே எஞ்சுவார். கவிதை என்பது வேறு. அதன் முதல் தகுதி தனித்தன்மை. பிறிதொன்றிலாத தன்மை. இதுவரையிலான தமிழ்க்கவிதையை கொங்குதேர் வாழ்க்கை (தமிழினி) போன்ற தொகுதிகள் வழியாக அவர் வாசிக்கலாம். அவர் நிற்குமிடமென்ன என்று அவருக்கே தெரியும். அதன்பின் அவருக்கு மட்டும் உரிய வரிகளை அவர் எழுதலாம். அவை அவருக்கு இலக்கிய இடத்தை அளிக்கக்கூடும். இந்த அசட்டுத்தனமான விருதால் அவர் அடையும் சிறுமை அதன்வழியாக அழியக்கூடும்.

அவரிடம் சொல்லவிரும்புவது இதையே. கவிதை, இலக்கியம் என்பதெல்லாம் எளிமையான விளையாட்டுக்கள் அல்ல. மேதைகள் எழுதிய மொழி இது. அவர்களின் தொடர்ச்சியாக அமைய, அவர்கள் எழுதியவற்றுக்கு அப்பால் ஒரு வரியேனும் எழுத, ஆழ்ந்த அர்ப்பணிப்பு தேவை. நீடித்த கவனம் தேவை. எவர் என்ன சொன்னாலும் இலக்கியம் ஒரு தவமேதான்” எனத் தெரிவித்துள்ளார்.

கூடவே அதே பதிவில், ``இது அவருக்கான குறிப்பு அல்ல. இந்நிலைமை எந்த இளம் படைப்பாளிக்கும் வரலாம். அனைவருக்குமாகவே இதை எழுதுகிறேன்” எனவும் கூறியுள்ளார். இன்னொரு பதிவில் ஜெயமோகன், விருதுப்பட்டியலில் அடுத்தடுத்து இருந்த பத்துபேர் பட்டியலில் தகுதியானவர்கள் என சிலரின் பெயரை வரிசைப்படுத்தியும் எழுதியுள்ளார். அதிலும் காளிமுத்துவுக்கு விருது அறிவிக்கப்பட்டதை விமர்சித்துள்ளார்.

காளிமுத்துக்கு நேற்று சாகித்ய அகாடமி விருது அறிவித்த நிலையில் ஜெயமோகன் இன்று இப்படி பதிவு எழுதியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in