
’உயிருக்குப் போராடிய மனைவியுடன் கண்ணீரில் நான் தத்தளித்து நின்றபோது, எங்களை சென்னை அரவணைத்த தருணத்தை மறக்கவே முடியாது’ என்று உருக்கம் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம்.
கிரிக்கெட் உலக வரலாற்றின் ஜாம்பான்களில் ஒருவர் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம். தனது கிரிக்கெட் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளின் அங்கமாக ’சுல்தான்: எ மெமோயிர்’ என்ற தலைப்பிலான சுயசரிதையை வெளியிட உள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றில் பலரும் அறிந்திராத உருக்கமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.
வாசிம் அக்ரமின் மனைவி ஹூமா அக்ரம். இதயம் மற்றும் சிறுநீரக செயல் இழப்பு தொடர்பான மருத்துவ சிக்கல்கள் அதிகரித்ததில், அவரை பாகிஸ்தானின் லாகூரில் இருந்து சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு அவசரப் பயணமாக அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. அதற்கான ஏர் ஆம்புலன்ஸ் சிங்கப்பூருக்கு விரைந்தபோது, வழியில் எரிபொருள் நிரப்பலுக்காக சென்னையில் தரையிறங்க வேண்டியதானது.
அப்போது எவரும் எதிர்பாரா வகையில் ஹூமா அக்ரம் உடல்நிலை மிகவும் மோசமானது. நினைவை படிப்படியாக இழந்த அவர் சற்று நேரத்தில் இறக்கும் அபாயமும் உருவானது. இதனால் பதறிப்போன வாசிக் அக்ரம், முன்பின் அறிந்திராத சென்னையில் ஏதேனும் மருத்துவ உதவி கிடைக்குமா என அலைபாய ஆரம்பித்தார்.
“விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள் முதலில் என்னை அடையாளம் கண்டுகொண்டனர். அதன் பின்னர் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் கனிவோடு எங்களை கையாண்டனர். எங்கள் இருவரிடமும் அப்போது இந்தியாவுக்கான விசா இல்லாதபோதும், சென்னை எங்களை அரவணைத்து அவசர கால மருத்துவ உதவிகளை வழங்கியது. ஒரு சக மனிதனாக அந்த உதவியை என்றென்றைக்கும் என்னால் மறக்க முடியாதது” என்று உருக்கம் தெரிவித்துள்ளார் வாசிம் அக்ரம். எனினும் சிகிச்சை பலனின்றி ஹூமா அக்ரம் அப்போது மரணமடைந்தார்.