கார் ஓட்டும்போது போதையில் இருந்தாரா ரிஷப் பண்ட்?: விபத்து குறித்து காவல் துறை விளக்கம்

கார் ஓட்டும்போது போதையில் இருந்தாரா ரிஷப் பண்ட்?: விபத்து குறித்து காவல் துறை விளக்கம்

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதற்கு அவர் மது அருந்தியிருந்தார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு போலீஸார் விளக்கமளித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணியளவில் உத்தராகண்ட் - டெல்லி நெடுஞ்சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சாலையோர தடுப்பில் அவரது கார் மோதிய பயங்கர விபத்திற்குள்ளானது. இதில் ரிஷப்பிற்கு தலை, முதுகு உள்பட பல இடங்களில் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. த்ற்போது அவர் உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில், ரிஷப் பண்ட் மதுபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் அதிவேகத்தில் காரில் அவர் சென்றதால் தான், விபத்தில் சிக்கியதாவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஹரித்துவார் காவல் துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

இதுகுறித்து ஹரித்துவார் காவல் கண்காணிப்பாளர் அஜய்சிங் கூறுகையில், "உத்தரப் பிரதேச எல்லையில் இருந்து விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தோம். அதில் ரிஷப் பண்ட் அதிவேகத்தில் செல்லவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவான, மணிக்கு 80 கி.மீ வேகத்திலேயே ரிஷப் பயணித்துள்ளார். சிசிடிவி காட்சியில் கார் அதிவேகமாக வந்ததுபோல் இருந்தாலும், அவர் கார் டிவைடரில் மோதியவுடன் அந்தரத்தில் பறந்தது. எனவே, அதிவேகமாக வந்தது போன்று தோன்றியுள்ளது. விபத்து நடந்த இடத்தை வல்லுநர் குழு ஆய்வு செய்தனர். அவர் காரை அதிவேகமாக இயக்கியதற்கான எந்த ஆதாரமும் அதில் கிடைக்கவில்லை.

அதுமட்டுமின்றி, அவர் கார் ஓட்டும்போது மது அருந்தியிருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அவர் மது அருந்தியிருந்தால், எப்படி 200 கி.மீ காரை ஓட்டி வந்திருக்க முடியும்? விபத்தில் இருந்து மீட்டு முதலில் அவரை அனுமதித்த ரூர்க்கி மருத்துவமனையும், அவர் மது அருந்திருக்கவில்லை என அறிக்கை அளித்துள்ளது. மது போதையில் இல்லாத காரணத்தால் தான் அவர் கண்ணாடியை உடைத்து தானாக காரில் இருந்து வெளியே வர முடிந்துள்ளது. போதையில் இருந்தால் அவரால் அப்படி வெளியேறியிருக்க முடியாது" என்றனர். இந்த விபத்தால் ஆறு மாத காலத்திற்கு ரிஷப் பண்டால் கிரிக்கெட் விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in