ரோனா வில்ஸனின் செல்போனில் பெகாசஸ் ஊடுருவியதா?

அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட தகவல்
ரோனா வில்ஸனின் செல்போனில் பெகாசஸ் ஊடுருவியதா?

பெகாசஸ் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. எல்கர் பரிஷத் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் சிறைக்கைதிகளின் உரிமைகளுக்கான செயல்பாட்டாளர் ரோனா வில்ஸனின் செல்போன் பெகாசஸ் ஸ்பைவேர் வேவு மென்பொருளால் ஊடுருவப்பட்டிருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்செனல் கன்சல்ட்டிங் எனும் டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

2018-ல் மகாராஷ்டிரத்தின் பீமா கோரேகானில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. அதன் பின்னணியில் 2017 டிசம்பரில் புணே நகரின் எல்கர் பரிஷத் எனும் இடத்தில் நடந்த கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்ட பேச்சுக்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறாது. இதுதொடர்பாக ரோனா வில்ஸன், வரவர ராவ், சுதா பரத்வாஜ் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். தடைசெய்யப்பட்ட மாவோயிஸச் சித்தாந்தத்தைப் பரப்பும் வேலைகளைச் செய்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ரோனா வில்ஸன் கைதுசெய்யப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்பு, அவருக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் மூலம் பெகாசஸ் வேவு மென்பொருள் அவரது செல்போனில் நிறுவப்பட்டிருப்பதாகச் சொல்கிறது ஆர்செனல் நிறுவனம். கேரளத்தைச் சேர்ந்த ரோனா வில்ஸன், டெல்லியில் வசித்துவந்தார். பல்கலைக்கழக அரசியல் போக்குகள், பட்டியலின, சிறுபான்மைச் சமூக மாணவர்கள் மீதான பாகுபாடுகள் போன்றவற்றைக் குறித்து பேசியும் எழுதியும்வந்தார். இந்தச் சூழலில், அவரது கவனத்தைக் கவரும் வகையில் உனாவில் பட்டியலினச் சமூகத்தினர் மீதான தாக்குதல், ஜேஎன்யூ பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமது காணாமல்போன விவகாரம் போன்ற தகவல்களைக் குறிக்கும் வாசகங்களுடன் குறுஞ்செய்திகள் அவருக்கு அனுப்பப்பட்டதாகவும், அவற்றில் கொடுக்கப்பட்ட இணைப்புகளைச் சொடுக்கியதன் மூலம் வேவு மென்பொருள் நிறுவப்பட்டது என்றும் சொல்கிறது ஆர்செனல்.

மாவோயிஸச் சிந்தனைகளைப் பரப்புவது தொடர்பாக ரோனா வில்ஸனின் கணினியில் 10 கடிதங்கள் கண்டறியப்பட்டதாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. முதலில் மகாராஷ்டிரக் காவல் துறையினர் விசாரித்துவந்த இந்த வழக்கு, 2020 ஜனவரியில் சிறப்பு தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்தக் கடிதங்கள் அனைத்தும் வெளியிலிருந்து அவரது கணினியில் நிறுவப்பட்டதாக ஆர்செனல் நிறுவனம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. எனினும், அந்தத் தகவலை தேசியப் புலனாய்வு முகமை மறுத்தது.

இந்நிலையில், அவரது செல்போனில் பெகாசஸ் ஊடுருவிய விதம் குறித்த தகவலை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ரோனா வில்ஸனின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து இதுகுறித்த ஆய்வை ஆர்செனல் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.

பெகாசஸ் ஸ்பைவேர் எனும் வேவு மென்பொருள் தொடர்பான தகவல்களை ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஃபார்பிடன் ஸ்டோரீஸ் ஆகிய அமைப்புகளும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17 ஊடகங்களும் சேர்ந்து சில மாதங்களுக்கு முன் வெளியிட்டன. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்பான பெகாசஸ், அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படும் என்றும், அதன் மூலம் ஒருவரின் அன்றாடச் செயல்பாடுகளை முழுமையாகக் கண்காணிக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், முன்னாள் நீதிபதி என ஏறத்தாழ 300 இந்தியர்களின் செல்போன்கள் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in