
மத்திய அரசின் கீழ் இயங்கும் நேரு யுவகேந்திராவில் தன்னார்வலர்கள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் நேரு யுவகேந்திரா செயல்பட்டு வருகிறது. நேரு யுவகேந்திராவிற்கு இந்தியா முழுவதும், அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகமும் உள்ளது. இங்கு நேரு யுவகேந்திராவின் மாவட்ட இளையோர் நல அலுவலரின் கீழ், ஒரு குழுவாக பணிசெய்து வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசு இளைஞர்களுக்காக செயல்படுத்தும் திட்டங்கள் போன்றவை இவர்கள் மூலம் பரப்புரை செய்யப்படுகின்றது. இதேபோல் நேரு யுவகேந்திராவின் கீழ் ஏராளமான இளைஞர் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் குழுக்களுக்கு உரிய வேலைவாய்ப்புத் தொடர்பான பயிற்சிகள், அவர்களின் கலை ஆர்வத்தை ஊக்கப்படுத்துதல், தகுதியானவர்களுக்கு வங்கிக்கடன் உள்ளிட்டவற்றுக்கு உதவுதல் ஆகிய பணிகளையும் நேரு யுவகேந்திரா செய்கிறது.
இந்த நிலையில் நேரு யுவகேந்திரா தன்னார்வலர்களாக பணிசெய்ய 18 முதல் 29 வயது வரையுள்ள இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் இருப்போர் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது நிரந்தரப்பணி அல்ல. அதேநேரம் இரு ஆண்டுகள் இதில் தன்னார்வலராக பணிசெய்ய முடியும். அந்தக்காலக்கட்டத்தில் மாதம் 5000 ரூபாய் இதற்கு மதிப்பூதியம் வழங்கப்படும். இந்த வேலையில் இளைஞர்கள் தங்கள் கல்வி, போட்டித் தேர்வுக்கு தயாராகுதல் ஆகியவற்றைத் தொடர, பொருளாதார ஆதரவாகவும் இருக்கும். இதுதொடர்பான விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலர்களிடமே இளைஞர்கள் சமர்ப்பிக்கலாம்.