வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்பு: 4 மாவட்டங்களில் அதிகாரிகள் அலர்ட்

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்பு: 4 மாவட்டங்களில் அதிகாரிகள் அலர்ட்

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருவோரை வட்டார அளவிலான அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

உலக சுகாதார நிறுவனம் புள்ளி விவரம் படி உலகம் முழுவதும் 65 கோடியே 19 லட்சத்து 18 ஆயிரத்து 402 பேர் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 கோடியே 65 லட்சத்து 6 ஆயிரத்து 601 பேர் இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் 4 கோடியே 46 லட்சத்து 76 ஆயிரத்து 678 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 30 ஆயிரத்து 690 பேர் இறந்துள்ளனர்.

இதனிடையே சீனா, அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய பி.எஃப்.7 என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மருத்துவ மையங்கள் அமைத்து கரோனா பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாடு பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளிடம் கரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல கோவை வந்துள்ள வெளிநாட்டு பயணிகள் 162 பேர் சுகாதாரத்துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து முடிவுகள் கிடைக்கும் வரை சுகாதாரத் துறையின் கண்காணிப்பு மையத்தில் வைத்திருக்கவும், அறிகுறிகள் இல்லாதவர்களில் 2 சதவீதம் பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாதவர்களிடம் மாதிரிகள் எடுக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களிடம் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு பயணிகளை 14 நாள்கள் வரை தொலைபேசி வழியாக கண்காணிக்க சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

இது ஒரு புறம் இருக்க கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு போன்ற மாவட்டங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க வட்டார அளவில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து வருவோர் கண்காணிப்பு வளையத்திற்குள் இருந்து ஒடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்கிற ரீதியில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில், "கரோனா தொற்று மீண்டும்‌ சீனா, பிரேசில்‌, பிரான்ஸ்‌ நாடுகளில்‌ அதிகளவில்‌ பரவி வருகிறது. இந்தியாவில்‌ ஒரிசா, குஜராத்‌ ஆகிய மாநிலங்களில் புதிய ஒமைக்ரான்‌ வைரஸ்‌ தொற்று உள்ளவர்கள்‌ கண்டறியப்பட்டுள்ளனர்‌. இதன்‌ காரணமாக கோவை விமான நிலையத்தில்‌ வெளி நாடுகளில்‌ இருந்து வரும்‌ பயணிகளை நோய்‌ தொற்று பரிசோதனை செய்யும்‌ பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கோவைக்கு வரும்‌ பயணிகளில்‌ பொதுவாக 2 சதவீத நபர்களுக்கு சளி மாதிரி எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக மருத்துவ அலுவலர்‌, சுகாதார ஆய்வாளர்‌, ஆய்வக நிபுனர்‌ ஆகியோர்‌ கொண்ட 3 குழுக்கள்‌ பணியில்‌ இருந்து நோய்‌ கண்காணிக்கும்‌ பணியை 24 மணி நேரமும்‌ சுழற்சி முறையில்‌ மேற்கொள்வார்கள்.‌

வெளி நாட்டிலிருந்து தங்கள்‌ பகுதிக்கு வரும்‌ பயணிகளை கண்காணிக்க வட்டார அளவில்‌ சுகாதார ஆய்வாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனையில்‌ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால்‌ அவர்களது மாதிரி மரபணு சோதனைக்காக சென்னையில்‌ உள்ள மாநில பொது சுகாதார ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்‌. பொது மக்கள்‌ தங்களை பாதுகாத்துக்‌ கொள்ள முகக்‌ கவசம்‌ அணிதல்‌, கைகளை சோப்பு கொண்டு அடிக்கடி கழுவுதல்‌, தனி மனித இடைவெளி கடைபிடித்தல்‌, இருமல்‌ தும்மல்‌ ஆகியவை இருக்கும்‌ பொழுது வாய்‌ மற்றும்‌ மூக்கு பகுதியை மூடிக்கொள்ளுதல்‌ போன்ற பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்‌. எனவே பொதுமக்கள்‌ அனைவரும்‌ விழிப்புணர்வுடன்‌ இருக்க வேண்டும்‌. அச்சம்‌ கொள்ளத்‌ தேவையில்லை" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in