உக்ரைன் அதிபரின் அமெரிக்கா பயணம்: ரஷ்யாவுடன் தீவிரமடையும் போர்!

உக்ரைன் அதிபரின் அமெரிக்கா பயணம்: ரஷ்யாவுடன் தீவிரமடையும் போர்!

உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பிப்ரவரி மாதம் முதல், சுமார் 300 நாட்களுக்கும் மேலாக இந்த போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மேற்கத்திய நாடுகள் நிதி, ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

உக்ரைன் ரஷ்யா போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்று அங்கு அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். போர் தொடங்கியதற்கு பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் காரணமாக இனி வரும் நாட்களில் போர் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் - ரஷ்யா போரால் இந்தியாவில் தொழில்துறைக்கு தேவைப்படும் மூலப்பொருள், சமையல் பொருட்கள் விலை போன்றவைகள் விலையேற்றம் அடைந்துள்ளன. போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் விலைவாசி மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தொழில்துறையினர், வியாபாரிகள் புகார் தெரிவிக்கின்றனர். குறிப்பாக பலரும் போரை காரணம் காட்டி செயற்கையாக விலையேற்றத்தை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தொழில்துறையினர் கூறுகையில், "உக்ரைன்-ரஷ்யா இடையே போர் துவங்கி சுமார் 10 மாதங்கள் ஆகிறது. இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய தொழில்நிறுவனங்களின் ஜாப் ஆர்டர், உற்பத்தி போன்றவற்றிக்கு தேவைப்படும் ஸ்டீல், காப்பர் போன்ற பல மூலப்பொருட்கள் ஏற்றுமதியில் இந்த நாடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதன் காரணமாக உலகம் முழுவதும் பெரியளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தொழில்நிறுவனங்களுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வினால் பணவீக்கமும் அதிகரித்துள்ளது. மேலும் போரை காட்டி மூலப்பொருட்கள் விலை செயற்கையாகவும் ஏற்றப்படுகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு கண்காணிப்பு கமிட்டி அமைக்க வேண்டும். இவ்வாறு அமைக்காவிட்டால் தொழில்நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட முடியாத சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது” என்றனர்.

இதுகுறித்து வணிகர் அமைப்புகளை சேர்ந்த வியாபாரிகள் கூறியதாவது, “உக்ரைன்-ரஷ்யா இடையே நடைபெறும் போரின் காரணமாக உலக அளவில் எண்ணெய் வித்துகள், தானியங்கள் போன்றவற்றின் தட்டுப்பாடு அதிகரித்தது. இதன் காரணமாக விலை உயர்வும் ஏற்பட்டது. அதன் பின்னர் ஐ.நா. சபையின் தலையீட்டை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் உக்ரைன் தானிய ஏற்றுமதியை துவங்கியது. இதன் காரணமாக தானியம் உள்ளிட்டவைகளின் விலை இந்தியாவில் சற்று குறைந்தது. சமையல் எண்ணெய் விலை பல மடங்கு உயர்ந்த நிலையில் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால் தற்போது மீண்டும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் சில பெரும் முதலாளிகள், வியாபாரிகள் உக்ரைன் ரஷ்யா போர் பதற்றத்தை பயன்படுத்தி செயற்கையாகவே மீண்டும் விலைகளை உயர்த்த திட்டமிட்டுள்ளனர். இதனை மத்திய, மாநில அரசுகள் கண்காணித்து தடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in