எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது!

எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது!

மூத்த எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்களால் நடத்தப்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், ஆண்டுதோறும் மூத்த படைப்பாளி ஒருவருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருதை வழங்கி கௌரவிக்கிறது. 2010-ம் ஆண்டு 50 ஆயிரம் பரிசுத்தொகையோடு தொடங்கப்பட்ட இந்த விருதின் இப்போதைய பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாய் ஆகும். நிகழாண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதினைப் பெறுபவரைப்பற்றிய நூல் ஒன்றும், ஆவணப்படமும் வெளியிடப்படும் என்பதால் இவ்விருதை இலக்கிய உலகம் பெரும் மதிப்பிற்குரிய விருதாகப் பார்க்கிறது. ஆ.மாதவன், பூமணி, வண்ணதாசன் உள்ளிட்ட சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்களும் இவ்விருதைப் பெற்றுள்ளனர். இந்நிலையில் தான் 2022-ம் ஆண்டிற்கான விருது, சாருநிவேதிதாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எழுத்தாளர் ஜெயமோகன் அறிவித்துள்ள பதிவில், “2022-ம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் இலக்கிய விருது எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்படுகிறது. நாற்பதாண்டுகளாக தொடர்ச்சியாக இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் சாரு நிவேதிதா தமிழில் மரபான அனைத்தையும் சமன்குலைக்கும் பிறழ்வெழுத்தின் முன்னோடியான படைப்பாளி. இந்திய இலக்கியக் களத்திலேயே எல்லா வகையிலும் பிறழ்வெழுத்தை முன்வைத்தவர் என அவரையே சொல்லமுடியும்.

இலக்கியக் கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள் வழியாக பிறழ்வெழுத்தின் வகைமைகளையும் அதன் ஆசிரியர்களையும் தமிழில் அறிமுகம் செய்தவர். இசையிலும் பிறழ்வெழுத்துக்கு இணையான சமன்குலைக்கும் வகைமாதிரிகளை அறிமுகம் செய்தவர். தன்வரலாறும் புனைவும் கலந்த எழுத்து அவருடையது. தன் வரலாற்றையும் தன்னையும் புனைந்து புனைந்து அழித்துக்கொள்ளும் இவ்வகை எழுத்து தமிழுக்கு அனைத்துவகையிலும் புதியது.சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது 2022 டிசம்பர் மாதம் இறுதியில் வழங்கப்படும். வழக்கம்போல விஷ்ணுபுரம் விழா நடைபெறும்.”என்று அறிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in