‘முஸ்லிம் அமைச்சர் நுழைந்ததால் தீட்டு’ - பிஹார் கோயிலைப் புனிதப்படுத்திய பூசாரிகள்

நிதீஷ் குமார் பகிரங்க மன்னிப்பு கேட்க பாஜகவினர் வலியுறுத்தல்
விஷ்ணுபத் கோயிலில் வழிபடும் நிதீஷ் குமார்
விஷ்ணுபத் கோயிலில் வழிபடும் நிதீஷ் குமார்

விஷ்ணுபத் (விஷ்ணுபாதம்) கோயிலின் கர்ப்பகிரகத்துக்குள், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் முகமது இஸ்ரைல் மன்சூரி நுழைந்ததால் கோயில் தீட்டுப்பட்டுவிட்டதாக, கோயில் பூசாரிகள் பரிகாரப் பூஜைகள் செய்தது பிஹாரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பிஹார் மாநிலம் கயா நகரில் பல்கூ ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது விஷ்ணுபத் கோயில். பல நூற்றாண்டுகள் பழமையான இந்தக் கோயிலில் ராமனும் சீதையும் வந்து வழிபட்டதாக ஐதீகங்கள் உண்டு. 18-ம் நூற்றாண்டில் இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 22-ம் தேதி, பிஹார் முதல்வர் நிதீஷ் குமார் அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தார். அவருடன் அம்மாநிலத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முகமது இஸ்ரைல் மன்சூரியும் சென்றிருந்தார். முன்னோர்கள் வழிபாடுக்காக ஆண்டுதோறும் நடைபெறும் ‘பித்ரபக்‌ஷா மேளா’ நிகழ்வுக்கான ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக இருவரும் அந்தக் கோயிலுக்குச் சென்றதாகவும் கர்ப்ப கிரகத்துக்குச் சென்று வழிபட்டதாகவும் கூறப்படுகிறது.

பிஹார் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முகமது இஸ்ரைல் மன்சூரி
பிஹார் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முகமது இஸ்ரைல் மன்சூரி

“தற்செயலாகத்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம், விஷ்ணுபத் கோயிலுக்குள் முதல்வர் நிதீஷ் குமாருடன் சென்றுவந்ததைப் பெருமிதமடைகிறேன்” என்று முகமது இஸ்ரைல் மன்சூரி தெரிவித்திருந்தார்.

‘பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை’

ஆனால், இந்து மதத்தினர் அல்லாத பிறர் இந்தக் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை என்று கோயில் முன்பாக எழுதிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் எப்படி கோயிலுக்குள் நுழையலாம் என அக்கோயிலின் பூசாரிகள் கோபமடைந்தனர். இதையடுத்து, நேற்று கோயிலின் தரை தண்ணீர் ஊற்றி கழுவப்பட்டது. பரிகார பூஜைகள், சடங்குகள் போன்றவற்றையும் கோயில் பூசாரிகள் நடத்தினர்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய விஷ்ணுபத் கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் ஷம்புலால் விட்டல், “மன்சூரி புதிதாக அமைச்சரானவர் என்பதால், அவர் கோயிலின் கர்ப்ப கிரகத்துக்குள் நுழைந்தபோது அவர் யார் என யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. இந்து அல்லாத ஒருவர் இந்தக் கோயிலுக்குள் நுழைந்தது இதுதான் முதல் முறை” என்று கூறினார். அமைச்சர் பதவியிலிருந்து மன்சூரி நீக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்!’

இதற்கிடையே இது அரசியல் பிரச்சினையாகவும் உருவெடுத்திருக்கிறது. இவ்விவகாரம் தொடர்பாக, முதல்வர் நிதீஷ் குமார் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தியிருக்கின்றனர்.

“இந்துக்கள் அல்லாதோர் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் விஷ்ணுபத் கோயிலுக்குள் முகமது இஸ்ரைல் மன்சூரியை அழைத்துச் சென்றதற்காக முதல்வர் நிதீஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும். மெக்காவில் அடியெடுத்துவைப்பது பற்றி நிதீஷ் குமாரால் நினைத்துப் பார்க்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கும் பிஹார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், நிதீஷ் குமார் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப்பேரவை உட்பட பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்றும் எச்சரித்திருக்கிறார்.

நிதீஷ் குமார்
நிதீஷ் குமார்

நிதீஷ் பதில்

இந்த விமர்சனங்களுக்கு, நேற்று பிஹார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்தின்போது நிதீஷ் குமார் பதிலளித்தார். 2010 சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இருந்ததால் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், இவ்விவகாரம் தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் யாரும் பகிரங்கமாகக் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in