குழந்தைகளைக் குறிவைக்கும் 'தக்காளி காய்ச்சல்': கேரளத்தை மிரட்டும் புதுவைரஸ்!

குழந்தைகளைக் குறிவைக்கும் 'தக்காளி காய்ச்சல்': கேரளத்தை மிரட்டும் புதுவைரஸ்!

கேரளத்தில் தக்காளி காய்ச்சல் என்னும் புதுவகையான வைரஸ் பரவிவருகிறது. இந்த வைரஸ் குழந்தைகளையே குறிவைத்துத் தாக்கி வருகிறது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட்டு 86 குழந்தைகள் இப்போது மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

வைரஸ்கள் மனித வாழ்வுக்கு பெரும் சவாலாக சமீபகாலமாக உருவெடுத்துள்ளன. கரோனா வைரஸின் கோரத்தாண்டவம் சற்று தணிந்து மக்களின் இயல்பு வாழ்க்கைத் திரும்பியிருக்கும் நிலையில், கேரளத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் புதுவகையான வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளான குழந்தைகள் பரவலாகவே கை, கால்கள் வெளிரி போதல் அல்லது வெள்ளை நிறமாதல், உடல் முழுவதும் வலி, காய்ச்சல் ஆகிய அறிகுறிகளைக் கொண்டிருந்தனர்.

கேரளத்தின் நெடுவத்தூர், ஆரியங்காவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக குழந்தைகளுக்கு இந்தப் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை சோதனை செய்தபோது, இது 'தக்காளி காய்ச்சல்' எனத் தெரியவந்தது. கேரளத்தில் அரசு மருத்துவமனைகளில் தங்கியும், வெளிநோயாளிகளுமாக இதுவரை 86 குழந்தைகள் இந்த நோய்க்குச் சிகிச்சைப் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் தரப்பில் கேட்டபோது, " தக்காளி வைரஸ் என்னும் வார்த்தைதான் புதிது. நம் தமிழகத்தில் கை,கால்,வாய் நோய் என்று இந்த வைரஸைச் சொல்வார்கள். வைரஸ் உடலில் நுழைந்து மூன்று முதல் ஆறுநாள்களுக்குள் அறிகுறிகள் தென்படும். காய்ச்சல், உடல் சோர்வு பிரதானமாக இருக்கும். இது சிறியவர்களையே பெரும்பாலும் தாக்கும். சின்ன, சின்னக் கொப்பளங்களும் ஏற்படலாம். அரிதிலும், அரிதாகவே நோய் எதிர்ப்புத்தன்மை குறைந்த பெரியவர்களைத் தாக்கும். அறிகுறி தென்பட்ட ஒருவாரத்தில் குணமாகிவிடும். இதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை”என்கின்றனர்.

Related Stories

No stories found.