சந்தேகமடைந்த பழவியாபாரி; கள்ள நோட்டுகளுடன் சிக்கிய பெண்கள்: கும்பல் தலைவனை தேடும் போலீஸ்

சந்தேகமடைந்த பழவியாபாரி; கள்ள நோட்டுகளுடன் சிக்கிய பெண்கள்: கும்பல் தலைவனை தேடும் போலீஸ்

விருதுநகரில் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேரிடம் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கள்ள நோட்டுகளை சப்ளை செய்யும் ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவரையும் தேடி வருகின்றனர்.

விருதுநகர்  அஹமது நகரைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (40). விருதுநகர் பழைய ஸ்டாண்ட் பகுதியில் பழக்கடை வைத்துள்ளார். இங்கு,  விருதுநகரைச் சேர்ந்த பாண்டி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்,  பழக்கடையில் இன்று காலை பழங்கள்  வாங்கிய பெண் ஒருவர் 500 ரூபாயை நீட்டினார். அந்த ரூபாய் தொடர்பாக பாண்டி சந்தேகமடைந்தார். வியாபாரத்தில் மற்றவர்கள்  கொடுத்த ரூபாயுடன், அந்த பெண் கொடுத்த ரூபாயை ஒப்பிட்டு பார்த்து கள்ளநோட்டு என உறுதி செய்தார். மூதாட்டியை  நிறுத்தி வைத்து பஸ் ஸ்டாண்ட்  புறக்காவல்  போலீஸாருக்கு பாண்டி தகவல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அங்கு வந்த  விருதுநகர் மேற்கு  போலீஸார்  அந்த பெண் மற்றும்  அவருடன் வந்த இளம்பெண் உள்பட 2 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில்,  சிவகாசி அருகே வேண்டுராயபுரத்தைச் சேர்ந்த சுப்புத்தாய் (56), இவரது மகள் துரைச்செல்வி (36), உறவினர் பாலமுருகன் (34)  எனவும், கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் எனவும் தெரியவந்தது.  மூன்று பேரிடமிருந்து 500 ரூபாய் 109  கள்ளநோட்டுகளை கைப்பற்றினர். இவர்கள் தகவல்படி கள்ள நோட்டு சப்ளை செய்யும் ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in