குண்டு சத்தத்துக்கு மத்தியிலும் காஷ்மீர் ரோஜாக்கள் மலரும்

அமைதி திரும்புமா?: இன்றைய வைரல் புகைப்படம் #KashmirMahilaCRPFMusings
குண்டு சத்தத்துக்கு மத்தியிலும் காஷ்மீர் ரோஜாக்கள் மலரும்
மகிளா சி.ஆர்.பி.எஃப் வீராங்னையுடன் கைகுலுக்கும் காஷ்மீர் சிறுவன்

அன்றைய தினத்தில் நமது கவனத்தை ஈர்த்து, மனதை மலர்த்திப் போடும் வீரியம் இந்த வைரல் புகைப்படங்களுக்கு உண்டு. அப்படியொரு படம் இன்று ஆயிரக்கணக்கான இந்தியர்களால் சிலாகித்து பகிரப்பட்டு வருகிறது.

காஷ்மீரில் சிறுபான்மை மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக பாதுகாப்பு படைகள் களமிறங்கி தீவிரவாதிகளை வேட்டையாடி வருகின்றன. அந்த பிராந்தியத்தின் பள்ளத்தாக்குகள் எங்கும் குண்டுச் சத்தம் எதிரொலிக்கிறது. இருதரப்புக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரமடைந்து வருகின்றன. தீவிரவாதிகள் வேட்டையாடப்படுவதுடன் வீரமரணமடையும் பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

சில இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், கதவு ஜன்னல்களை சாத்திக்கொண்டு பத்திரமாக இருக்கும்படியும் பாதுகாப்பு படைகள் அறிவுறுத்தி இருக்கின்றன. இந்த களேபரங்களுக்கும் மத்தியிலும் காஷ்மீர் ரோஜாக்கள் பூக்கத்தான் செய்கின்றன. அமைதியை நேசிக்கும் மக்களின் பிரார்த்தனைகளும் தொடர்ந்து வருகின்றன.

உயிரை பணயம் வைத்து காஷ்மீர் பாதுகாப்பில் மெனக்கிடும் பாதுகாப்பு படையினரை விதந்தோதும் வகையில், 2 ஆண்டுகள் பின்னணி கொண்ட இந்த புகைப்படம் இன்று மீண்டும் உயிர் பெற்றது.

காஷ்மீர் மக்களின் பிரதிநிதியாக ஒரு சிறுவன், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சிஆர்பிஎஃப் வீராங்கனையை சந்திக்கிறான். அதுவரை அவன் முகத்தில் மண்டியிருந்த கவலை ரேகைகள் விடைபெற பூக்கும் முறுவலுடன் அந்தப் பெண்மணியின் கரத்தை பற்றுகிறான்.

அந்த வீராங்கனைக்கு அவன் தாய் வயதிருக்கலாம். அந்த சிறுவன் வயதில் சொந்தமாகவோ, சொந்தத்திலோ அவருக்கும் ஒரு குழந்தை இருக்கக்கூடும். தனது விரைப்பான பாதுகாப்பு கடமைக்கு இடையே நீளும் பிஞ்சு கரத்தை தயக்கமின்றி அவரும் பற்றிக்கொள்கிறார். இருவருக்குமே அந்த கைப்பற்றல் தேவையாகிறது. இருவரின் கனிவான பார்வைகளும், வாஞ்சையான அந்த கைப்பற்றலும் பேசும் மொழியற்ற உரையாடலை இந்த புகைப்படம் பதிவு செய்திருக்கிறது.

இவர்களுக்காகவும் காஷ்மீரத்தில் விரைந்து அமைதி திரும்பட்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in