ஹெல்மெட் இல்லாமல் போனால் 500 ரூபாய் எடுத்துட்டுட்டுப் போங்க: சென்னையில் இன்று முதல் அபராதம் வசூல்

ஹெல்மெட் இல்லாமல் போனால் 500 ரூபாய் எடுத்துட்டுட்டுப் போங்க: சென்னையில் இன்று முதல் அபராதம் வசூல்

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு இன்று முதல் புதிய அபராதத்தொகை வசூலிக்கப்பட உள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களால் விபத்தும், போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு பல மடங்கு அபராதத்தொகையை அதிகரித்து சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி இன்று முதல் புதிய அபராதத்தொகை வசூலிக்கும் நடைமுறை அமலுக்கு வருகிறது.

இன்று முதல் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் முதல் முறையாக வேகமாக சென்றால் ரூ.1000, ஒரு முறைக்கு மேல் ரூ.10 ஆயிரம், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனப் பந்தயத்தில் முதல் தடவையாக ஈடுபட்டால் ரூ. 15 ஆயிரம், ஒரு முறைக்கு மேல் ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும்.

இருசக்க வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சைலென்ஸரை மாற்றம் செய்து இயக்கினால் ரூ.1000, சிக்னல் விதிகளை மீறினால் ரூ. 500 முதல் ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும் நிறுத்தற்கோடுகளை மீறினால் ரூ. 500 முதல் ரூ.1500 வரை, உடல் மற்றும் மனதளவில் வாகனங்களை இயக்க தகுதியற்றவர்கள் வாகனங்களை இயக்கினால் ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராதம், மியூசிக்கல் ஹார்ன், ஏர் ஹார்ன் பயன்படுத்தினால் ரூ.500, வாகனப் பதிவு இல்லாமல் வாகனம் இயக்கினால் ரூ. 2500 முதல் ரூ. 5 ஆயிரம் வரை வசூலிக்கப்படும். லைசென்ஸ் இல்லாமல் வாகனங்கள் இயக்கினால் ரூ. 5 ஆயிரம், செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்கினால் முதல் முறை ரூ.1000, ஒரு முறைக்கு மேல் ரூ. 10 ஆயிரம், கார் மற்றும் கனரக வாகனங்களின் மூலம் காற்று மாசு ஏற்படுத்தினால் ரூ.10 ஆயிரம், இரு சக்கர வாகனங்களில் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 500, பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ. 500, மது போதையோடு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த புதிய அபராதம் இன்று முதல் வசூலிக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in