’திருந்திட்டேன்; கர்ப்பமாக இருக்கிறேன்.. என்னை தேடாதீங்க’ -ரவுடி பேபி தமன்னா லேட்டஸ்ட் வீடியோ!

ரவுடி பேபி தமன்னா என்னும் வினோதினி
ரவுடி பேபி தமன்னா என்னும் வினோதினி

பட்டாக்கத்தியுடன் ரவுடி பேபி தமன்னாவின் ரவுசு வீடியோ வைரலானதில், அவர் காவல்துறையால் தேடப்படும் நபரானார். போலீஸ் நெருக்கடி அதிகரித்ததில் ‘நான் திருந்திட்டேன்..’ என தன்னிலை விளக்க வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதுவும் தற்போது வைரலாகி வருகிறது.

கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த ரவுடி கோகுல், கோவை கோர்ட் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த 2021ம் ஆண்டில் ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்தார். ஸ்ரீராம் கொலைக்கு பழி வாங்கலாகவே கோகுல் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில் குரங்கு ஸ்ரீராம் நண்பர்கள் வட்டாரத்தின் முக்கிய குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது ரத்தினபுரியில் வசித்து வந்த தமன்னா என்கிற 23 வயதாகும் வினோதினி குறித்த தகவல் கிடைத்தது. இவர் பீளமேடு பகுதியில் தனது நண்பர் ஒருவருடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக கைது செய்யப்பட்டார். சிறைக்கு சென்று ஜாமீனில் திரும்பிய வினோதினி, தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்த வினோதினி பல்வேறு ஆட்சேபகரமான வீடியோக்கள், ஆயுதங்களுடன் காட்சியளிக்கும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். போத்தனூரை சேர்ந்த ரவுடி விக்கு சண்முகம் என்பவருக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமன்னா வெளியிட்டார். கத்தி, அரிவாளுடன் ’விக்கு ணா பேன்ஸ்’ என்ற பெயரில் வீடியோ வெளியிட்டு வைரலானார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்திலான இந்த வீடியோ குறித்து விசாரித்த போலீசார், வினோதினியை வளைக்க தனிப்படையும் அமைத்தனர். போலீசார் தன்னை தீவிரமாக தேடுவதை அறிந்தது, வினோதினியும் அவரைச் சேர்ந்தவர்களும் பீதி அடைந்தனர். தமிழகத்தில் ரௌடிகள் பலரின் முட்டிக்கு கீழாக போலீசாரின் துப்பாக்கி குண்டுகள் பதம் பார்ப்பது அதிகரித்து வருவதால், வினோதினி அண்ட் கோ பயந்து போனது.

இந்த நிலையில் முந்தைய வீடியோ மற்றும் தன்னுடைய தற்போதைய நிலை குறித்து விளக்கமான வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறார் வினோதினி. அந்த வீடியோவில், ‘‘நான் 2 ஆண்டிற்கு முன்பு தான் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை வெளியிட்டு வந்தேன். அப்போது டிரண்டிங் ஆகும் ஆசையில் அந்த வீடியோக்களை பதிவிட்டேன். அதன் பிறகு கஞ்சா வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பியதும் ஆட்சேபகரமான வீடியோக்கள் எதையும் வெளியிடவில்லை.

ஆனாலும் போலீசார் என்னை தேடுகிறார்கள். என் நண்பர்கள் சிலரை போலீஸ் ஸ்டேஷனில் பிடித்து வைத்துக்கொண்டு விட மறுக்கிறார்கள். நான் வந்தால் மட்டுமே அவர்களை விடுவிப்போம் என்று போலீஸ் சொல்கிறதாம். நான் முன்பு போலில்லை. இப்போது திருமணம் செய்து, கணவருடன் வாழ்ந்து வருகிறேன். 6 மாத கர்ப்பமாகவும் இருக்கிறேன். வீடியோ எதையும் நான் இப்போது போடவில்லை. பழைய வீடியோவில் முடி வெட்டியிருப்பேன். அதனுடன் இப்போது ஒப்பிட்டு பார்த்தாலே புரியும். திருந்தி வாழும் என்னை போலீசார் தேட வேண்டாம்’’ என அவர் வீடியோவில் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in