
விழுப்புரம் அருகே ஆண் நண்பருடன் சென்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மூன்று பேரை பிடிக்க பத்து தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாதா தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே செங்கமெடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அதே பள்ளியில் படிக்கும் தனது ஆண் நண்பர் ஒருவருடன் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ஏரிக்கரைக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்த மூன்று இளைஞர்கள் அந்த மாணவரை கடுமையாக தாக்கிவிட்டு, மாணவியை மிரட்டி அவர்களில் இருவர் பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் இருவரிடமும் இருந்த செல்போன்கள், வெள்ளி சங்கிலி, மோதிரம் உள்ளிட்டவற்றையும் அவர்கள் பிடுங்கி சென்றுள்ளனர். அதையடுத்து மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பிய மாணவியைப் பார்த்து பதறிய அவரது உறவினர்கள் விஷயத்தை கேட்டு தெரிந்து கொண்டு மாணவியையும், தாக்குதலுக்கு உள்ளான அவரது நண்பரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
மேலும் இது குறித்து மாணவியின் உறவினர்கள் அளித்துள்ள புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள விழுப்புரம் போலீஸார் அந்த மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ள விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாணவியை மிரட்டிய அந்த மூவரையும் கைது செய்ய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.