திமுக எம்எல்ஏ பிறந்தநாளுக்கு விதிகளை மீறி பேனர் - காவல்துறையைக் கண்டித்து இளைஞரின் நூதன வீடியோ

திமுக எம்எல்ஏ பிறந்தநாளுக்கு விதிகளை மீறி பேனர் - காவல்துறையைக் கண்டித்து இளைஞரின் நூதன வீடியோ

விழுப்புரம் அருகே திமுக எம்எல்ஏவின் பிறந்தநாளுக்கு விதிகளை மீறி அவரின் ஆதரவாளர்கள் பேனர் வைத்துள்ளனர். இவர்கள்மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்து இளைஞர் ஒருவர் தலையில்லா உருவ பொம்மையை சாட்டையால் அடிக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.

விழுப்புரம் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக உள்ள டாக்டர் லட்சுமணனின் 50வது பிறந்தநாள் கடந்த 30ம் தேதி அவரின் ஆதரவாளர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதற்காக விழுப்புரம், கோலியனூர், வளவனூர் உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமான பேனர்கள் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தது.

இதனால் போக்குவரத்து இடைஞ்சலாக உள்ளது. இதனை உடனே அப்புறப்படுத்தவேண்டும் என்று வளவனூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற இளைஞர் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இன்று சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.

அந்த வீடியோவில் தலையில்லா பொம்மை ஒன்றை படுக்கவைத்து, சாட்டையால் அடிக்கும் இளைஞர் ஒருவர் சாட்டையை கையில் ஏந்தியபடி பேசியது, “இந்த வீடியோ தமிழக காவல்துறை டிஜிபி கண்ணில் படும்வரை பகிருங்கள். விழுப்புரம் எம்எல்ஏ லட்சுமணன் ஆதரவாளர்கள் வளவனூர் பேருந்து நிலையத்தை ஆக்கிரமித்து பேனர்கள் வைத்துள்ளனர். இது குறித்து எஸ்பிக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதே போல விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் அருகே எம்எல்ஏ அலுவலகம் அருகில் இதே போல பேனர் வைத்துள்ளனர். இது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத எஸ்பியை கண்டித்து இந்த தலையில்லா முண்டத்திற்கு சாட்டையால் அடிக்கும் அடி அவருக்கு கேட்கட்டும்.

இது குறித்து எம்எல்ஏவிடம் சொல்லியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. உனக்குதான் எவ்வித உணர்வும் இல்லை. அது போல காவல்துறையினரும் உள்ளனர். இதே போல விழுப்புரத்தில் அரசு சொத்துக்களில் விளம்பர போஸ்டர் ஒட்டி சேதப்படுத்துகிறார்கள். இது குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டும் காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை. அப்படி நடவடிக்கை எடுத்து இருந்தால் மற்றொருவர் போஸ்டர் ஒட்டுவாரா” என கேள்வி எழுப்பி சாட்டையால் தலையில்லா பொம்மையை அவர் அடிக்கிறார். இந்த வீடியோ விழுப்புரம் மாவட்டத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த 2019 ம் ஆண்டே முதல்வர் மு.க.ஸ்டாலின் பேனர்கள் வைக்கக்கூடிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் எனவும், கட்சித் தொண்டர்களை பேனர்கள் வைக்கக் கூடாது என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in