பேருந்தில் நிரம்பி வழிந்த பயணிகளின் கூட்டம்; மடக்கிப் பிடித்த விழுப்புரம் கலெக்டர்: நடுரோட்டில் காட்டிய அதிரடி

பேருந்தில் நிரம்பி வழிந்த பயணிகளின் கூட்டம்; மடக்கிப் பிடித்த விழுப்புரம் கலெக்டர்: நடுரோட்டில் காட்டிய அதிரடி

போக்குவரத்து விதியை மீறி அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தை மடக்கி பிடித்த விழுப்புரம் கலெக்டர், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி காட்டினார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த விபத்துகளை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, தனியார் பேருந்துகளுக்கு இடையே பயணிகளை ஏற்றுவதில் போட்டாப் போட்டி நிலவுகிறது. இதனால் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்துகள் செல்கின்றன. பயணிகள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்யும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்யும் பலர் விபத்தில் உயிரிழக்கும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது.

இதனை தடுக்க போக்குவரத்து காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளையும் கண்காணிப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தனியார் பேருந்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். விழுப்புரத்தில் இருந்து செஞ்சிக்கு இன்று அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுக் கொண்டு தனியார் பேருந்து ஒன்று கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது விழுப்புரம் மாவட்டம், குன்றத்தூரில் நடைபெற இருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாவட்ட கலெக்டர் மோகன் தனது காரில் சென்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், தனியார் பேருந்து ஒன்று அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி சென்று கொண்டு இருந்ததை பார்த்த கலெக்டர், பேருந்தை மடக்கி நிறுத்தினார். இதையடுத்து, கலெக்டர் விதி மீறி செயல்பட்ட கண்டக்டருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி காட்டினார். விழுப்புரம் கலெக்டரின் இந்த நடவடிக்கை பயணிகளை ஆச்சரியப்பட வைத்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in