`எங்க ஊர் குளத்தை மீட்டுக் கொடுங்கள்'- மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்ட கிராம மக்கள்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள்
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்ட கிராம மக்கள்

தங்கள் பயன்பாட்டில் இருந்த குளத்தை தங்களுக்கு மீட்டு தரக்கோரி கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வந்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் வட்டத்தில் மங்கைநல்லூரில் உள்ள அய்யனார்கோயிலுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தின் அருகே ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காலம் காலமாக இந்த குளத்தை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த பல ஆண்டுகளாக இந்த குளத்திற்கு தண்ணீர்வரும் வாய்க்கால், வடிகால் வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்புகளால் தூர்ந்துபோய் விட்டது.

அதனால் மழை காலங்களில் மட்டுமே தண்ணீர் நிரம்பி காணப்படும். அதற்கும் மேல் தேங்கி நிற்கும் நீர் வடிவதற்குகூட வழி இல்லாமல் இருந்து வருகிறது. மேலும் குப்பைகள் சேர்ந்து தண்ணீர் மாசுப்பட்டு துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதனையடுத்து அப்பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். இந்த சூழலில் திடீரென மேலமங்கைநல்லூரை சேர்ந்த சிலர் அந்த குளம் தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், அதில் வேறு யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்று கூறி பிரச்சினை செய்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 5 பேர் மீது பெரம்பூர் காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்த பிரச்சினை தொடர்பாக குத்தாலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தாங்கள் பயன்படுத்தி வரும் அய்யனார்கோயில் குளத்தை அந்தபகுதியில் வசிக்கும் தாங்களே பராமரித்து பயன்படுத்துவதற்கு ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அக்கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று திரண்டு வந்தனர். அங்கிருந்த அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

பல ஆண்டு காலமாக அவ்வூர் கிராம மக்கள் பயன்படுத்தி வரும் இந்த குளத்தை தற்போது பயன்படுத்த கூடாது என தடுப்பது ஏற்புடையது அல்ல என்று கூறும் அப்பகுதி மக்கள், இது தீண்டாமை வன்கொடுமையாக கருதப்பட வேண்டும் என்கின்றனர். இதனால் இந்த பிரச்சினை பெரிதாகாத வண்ணம் மாவட்ட நிர்வாகம் விரைந்து தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

தங்கள் பயன்பாட்டில் உள்ள குளத்திற்காக கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in