
மத்திய பிரதேச மாநிலத்தில் கிராம சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், நர்மதா நதியைக் கடப்பதற்காக ரப்பர் டியூப்பில் உயிரிழந்த நபரின் சடலத்தை சிலர் எடுத்துசென்ற வீடியோ வைரலாகியுள்ளது.
அனுப்பூரில் உள்ள தட்பதாரா கிராமத்தை சேர்ந்த விஷ்மத் நந்தாவுக்கு (55) மாரடைப்பு ஏற்பட்டதால் திண்டோரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஞாயிற்று கிழமையன்று சேர்க்கப்பட்டார், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பாதர்குச்சா வரை ஆம்புலன்ஸ் மூலமாக உயிரிழந்தவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் நர்மதா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தடபத்தரா கிராமத்தை இணைக்கும் ஒரே சாலை வெள்ளத்தில் மூழ்கிவிட்டது. இந்த ஊருக்கு செல்ல பாலம் இல்லாததால் ஆம்புலன்ஸ் கிராமத்துக்குள் செல்லமுடியவில்லை. இதன்காரணமாக உயிரிழந்தவரின் உறவினர்கள், அவரின் சடலத்தை ரப்பர் டியூப் மூலமாக கிராமத்தை நோக்கி நீந்தியபடியே எடுத்து சென்றுள்ளனர்.
திண்டோரியில் உள்ள பதர்குச்சா மற்றும் அனுப்பூரில் உள்ள தட்பதாரா இடையே ஓடும் நர்மதா நதியில் உயிரிழந்தவரின் சடலம் ரப்பர் ட்யூப் மூலம் எடுத்துசெல்லப்படும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் அபிஷேக் சவுத்ரி தெரிவித்துள்ளார்.