
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள கண்மாய் மீது கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தற்காலிகமாக மரப்பாலம் அமைத்து அதன் மீது ஏறி ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமாதபுரம் மாவட்டம், பரமக்குடியி அருகே உள்ளது எஸ்.வி.மங்களம் கண்மாய். வைகை ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த கண்மாயில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இக்கண்மாய் பாசனம் மூலமாக விலை நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. இந்த நிலங்களுக்கு கண்மாயைக் கடந்து தான் விவசாயம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஊரின் மத்தியில் இக்கண்மாய் அமைந்துள்ளதால், இப்பகுதி மக்கள் விவசாயப் பணிகளுக்காக சுமார் 10 கிலோ மீட்டர் ஊரை சுற்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, கண்மாயின் மீது நிரந்தர பாலம் அமைத்துத் தரக்கோரி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், ஊர் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்மாயின் மீது சிறிய மரக்கட்டைகளை வைத்து, தற்காலிக பாலம் அமைத்து அதில் ஆபத்தான முறையில் பயணித்து வருகின்றனர்.
இதுகுறித்து எஸ். வி.மங்கலத்தைச் சேர்ந்த பாண்டி என்பவர் கூறும்போது, "இக்கண்மாயின் மீது பாலம் இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பாலம் அமைத்துத் தரக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பயனும் இல்லை. எனவே, அரசாங்கம் விரைந்து இப்பகுதியில் ஒரு பாலத்தை கட்டித் தர வேண்டும்" என்று ஊர் மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.