
காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் நிலக்கரி இறக்குமதியை நிறுத்த வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து துறைமுகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் அடுத்த வாஞ்சூர் பகுதியில் தனியார் துறைமுகம் ஒன்று பத்தாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி மற்றும் சிமென்ட் ஆகியவை இந்த துறைமுகம் வழியாக அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிகள் மற்றும் சிமென்ட் ஆகியவை காற்றில் பரவி துறைமுகம் அருகில் உள்ள வாஞ்சூர் கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மேலும் நிலக்கரியால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவதாகவும், குடிநீர் மற்றும் உணவு பொருட்கள் பாதிக்கப்படுவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர். எனவே நிலக்கரி மற்றும் சிமென்ட் இறக்குமதியை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை திடீரென்று தனியார் துறைமுகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாகப்பட்டினம்- காரைக்கால் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.