நாகாலாந்து: கிளர்ச்சியாளர்கள் என நினைத்து கிராமத்தினர் மீது தாக்குதல்

ராணுவ வீரர் உட்பட 14 பேர் மரணம்
மாதிரிப் படம்
மாதிரிப் படம்

நாகாலாந்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைக்காகச் சென்ற பாதுகாப்புப் படையினர், தவறுதலாக உள்ளூர் கிராமத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் மீது கிராமத்தினர் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். மியான்மர் அருகில் எல்லைப்புறத்தில் உள்ள மோன் மாவட்டத்தின் திரு எனும் கிராமத்தில், இன்று காலை இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது.

மோன் பகுதியில் நாகா கிளர்ச்சிக்குழுவான என்எஸ்சிஎன்(கே) அமைப்பு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. உல்ஃபா அமைப்பும் இங்கு செயல்படுகிறது. என்எஸ்சிஎன் (ஐஎம்), என்எஸ்சிஎன்(கே) உள்ளிட்ட நாகா குழுக்கள், அசாம், மணிப்பூர், அருணாசல பிரதேசம் ஆகிய அண்டை மாநிலங்களிலும், அண்டை நாடான மியான்மரிலும் நாகா இனத்தவர்கள் வசிக்கும் பகுதிகளை இணைத்து ‘நாகாலிம்’ எனும் பிரதேசத்தை உருவாக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் இயங்கிவருபவை.

இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், அங்கிருந்த கிராம மக்களைக் கிளர்ச்சியாளர்கள் எனத் தவறாகக் கருதிக்கொண்டு தாக்குதல் நடத்தியதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. திரு கிராமத்திலிருந்து ஓட்டிங் எனும் இடத்துக்குச் செல்லும் வழியில் வாகனத்தில் சென்றுகொண்டிருந்த கிராமத்தினர் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து கோபமடைந்த உள்ளூர் மக்கள், பாதுகாப்புப் படையினரைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினரின் 3 வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. இதனால், தற்காப்புக்காகக் கூட்டத்தை நோக்கிப் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். இந்தச் சம்பவங்களில் மொத்தம் 14 பேர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து, உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் தொடர்பாக நம்பகமான உளவுத் தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை எடுக்கப் பாதுகாப்புப் படையினர் சென்றதாகவும், இந்தச் சம்பவத்துக்கும், அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களுக்கும் வருத்தம் தெரிவிப்பதாகவும் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவும் இந்தச் சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்திருக்கிறார். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருக்கும் அவர், நாகாலாந்து மாநிலம் அமைத்திருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

நாகாலாந்து முதல்வர் நெபியூ ரியோ இந்தச் சம்பவத்தைக் கண்டித்திருக்கிறார். ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் ‘ஹார்ன்பில் திருவிழா’வுக்காக உலகம் முழுவதுமிருக்கும் சுற்றுலாப் பயணிகளும், வெளிநாட்டுச் சிறப்பு அழைப்பாளர்களும் நாகாலாந்து வந்திருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in