பட்டா மாற்றத்துக்கு 8 ஆயிரம் லஞ்சம்: விஏஓவை காத்திருந்து கைது செய்த போலீஸ்

கிராம நிர்வாக அலுவலர் தேவதாஸ்
கிராம நிர்வாக அலுவலர் தேவதாஸ்

பட்டா மாறுதல் செய்வதற்கு 8000 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார்  கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முகமது தஜ்மில். இவர் பட்டா மாற்றம் செய்வதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். அந்த விண்ணப்பத்தை சரிபார்த்த பேரளம் கிராம நிர்வாக அலுவலர் தேவதாஸ்,  பட்டா மாறுதலுக்காக 8000 ரூபாய்  லஞ்சம்  தர வேண்டும் என்று முகமது தஜ்மில்லிடம் கேட்டுள்ளார். அதற்கு முகமது தஜ்மில் விரும்பவில்லை. 

இதையடுத்து அவர் திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் இதுகுறித்து தகவல் கொடுத்தார்.  அதனையடுத்து அவர்கள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை   முகமது தஜ்மில் வசம் கொடுத்து அதை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்கச் சொன்னார்கள். அதன்படி இன்று  கிராம நிர்வாக அலுவலரிடம் சென்ற முகமது தஜ்மில்  ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலரிடம்  கொடுத்தார். 

அப்போது அங்கு மறைந்திருந்த  லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நந்தகோபால்  தலைமையிலான போலீஸார் கிராம நிர்வாக அலுவலர்  தேவதாஸை  கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து  விசாரணை மேற்கொண்டு வருகிறது. லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டிருப்பது திருவாரூர் மாவட்டத்தில்  வருவாய்த்துறை ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in