திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகே கண்ணூர் கிராம நிர்வாக அலுவலர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் கண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ராகவன் மகன் பார்த்திபன். இவர் பொறியியல் பட்டதாரி. இவர் சொந்தமாக ஜேசிபி வாகனம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக சொத்து மதிப்பு சான்றிதழ் தேவைப்பட்டது.
எனவே பார்த்திபன் சொத்துமதிப்பு சான்றிதழ் வேண்டி மருங்காபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 6-7-2023 அன்று விண்ணப்பம் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்காக கண்ணூர் கிராம நிர்வாக அலுவலரிடம் வந்தது. இதனை அறிந்த பார்த்திபன் நேற்று 24-7-23 காலை 10 மணி சுமாருக்கு கண்ணூர் கிராம நிர்வாக அலுவலர் அமீர்கானை சந்தித்து சொத்து மதிப்பு சான்றிதழ் பெற பரிந்துரை செய்யக் கோரியுள்ளார்.
அதற்கு கண்ணூர் விஏஓ அமீர்கான் ரூ.6,000 லஞ்சமாக கொடுத்தால் தான் சொத்து மதிப்பு சான்றிதழ் கிடைப்பதற்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியுள்ளார். பார்த்திபன் எவ்வளவு கேட்டும், ஆயிரம் ரூபாய் மட்டும் குறைத்துக் கொண்டு ரூ.5,000 வேண்டும் என்று விஏஓ அமீர்கான் கறாராக கூறியுள்ளார்.
இதனையடுத்து லஞ்சம் கொடுக்க விரும்பாத பார்த்திபன் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறையில் இது குறித்து புகார் அளித்தார். அதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினரின் ஆலோசனையின் பேரில் அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய நோட்டுகளுடன் சென்ற பார்த்திபன், கண்ணூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு இன்று 25.7.23 காலை சுமார் 11 மணியளவில் சென்று விஏஓ அமீர் கானிடம் ரூ.5,000 ரொக்கத்தை லஞ்சமாக கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வி.ஏ.ஓ. அமீர்கானை லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். பின்னர், டி.எஸ்.பி.,மணிகண்டன் தலைமையிலான போலீஸார் மேற்கொண்டு விசாரணைக்காக அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.