
சொந்த மாநிலத்திற்குச் செல்லும் வட மாநில தொழிலாளர்கள் குறித்து கவலைப்படும் அரசு, சொந்த மாநிலத்தில் இருக்கும் அமைப்புச்சாரா தொழிலாளர்கள் குறித்து கவலைப்படாதது வேதனையாக உள்ளது என இடம்பெயரும் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இடம்பெயரும் தொழிலாளர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த கீதா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘’ வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு கவனம் செலுத்துகிறது. ஆனால், பல வருடங்களாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு என்று தனி ஆணையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
புலப் பெயர் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார வசதிகள், மருத்துவ வசதிகள், குழந்தைகளுக்கு மருத்துவ காப்பீடு, இறந்தவர்களைச் சொந்த ஊருக்கு எடுத்து செல்ல உதவி என பல கோரிக்கைகளை முன் வைத்தும் அரசு கண்டுக் கொள்ளவில்லை.
ஆனால், சொந்த ஊருக்கு வடமாநில தொழிலாளர்கள் செல்கிறார்கள் என்றதும் முக்கியத்துவம் அளித்து அந்த பிரச்சினையை அரசு தீர்த்து வைத்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. பல நாட்களாக போராடி வரும் எங்களது கோரிக்கைக்கும் முக்கியத்துவம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.